மு.க.அழகிரி
மு.க.அழகிரி புதிய தலைமுறை
தமிழ்நாடு

மதுரை தாசில்தார் வழக்கு - விடுதலையான மு.க.அழகிரி.. வழக்கின் பின்னணி என்ன? முழு விவரம்!

PT WEB

செய்தியாளர்: மதுரை மணிகண்டபிரபு

கடந்த 2011ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின் போது மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள வெள்ளலூர் அம்பலக்காரன்பட்டி வல்லடிகாரர் கோயிலுக்குள், ஓட்டுக்கு வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக புகார் எழுந்தது.

இதுகுறித்து அப்போதைய மேலூர் தேர்தல் அதிகாரியும் தாசில்தாருமான காளிமுத்து மற்றும் தேர்தல் அலுவலர்கள், வீடியோ கேமராமேனுடன் அங்கு சென்று வீடியோ எடுத்தபோது முன்னாள் முத்திய அமைச்சர் மு.க.அழகிரி தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அதில் அவர்கள் தன்னை அடித்து, உதைத்ததாக தாசில்தார் காளிமுத்து கீழவளவு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

வழக்கு பதிவு

இதனையடுத்து முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மற்றும் முன்னாள் துணைமேயர் பி.எம். மன்னன், தி.மு.க.வைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளான ரகுபதி, திருஞானம், ஒத்தப்பட்டி செந்தில், பொன்னம்பலம், தமிழரசன், நீதிதேவன், சேகர், மயில்வாகனன் ராகவன், ராமலிங்கம், சோலைநாகராஜா, வெள்ளையா பாலகிருஷ்ணன், அய்யனார், கருப்பணன், பாலு, போசு உள்ளிட்ட 21 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இவர்களின் மேல் சட்டவிரோத கூட்டம், அரசு அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்தல், தேர்தல் நடத்தை விதிகளை மீறுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்திவு செய்யப்பட்டது.

வழக்கு விவரம்

  • இது தொடர்பான வழக்கு விசாரணை மேலூர் நீதிமன்றத்தில் கடந்த 2011ஆம் ஆண்டு முதல் 2019 ம் ஆண்டு வரை நடைபெற்றது.

  • 2020ஆம் ஆண்டு முதல் மதுரை மாவட்ட முதலாவது நடுவர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது

  • இந்த வழக்கு தொடர்பாக 25க்கும் மேற்பட சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதில் முக்கிய சாட்சியான காளிமுத்துவின் சாட்சி பிறழ்சாட்சியாக மாறியது.

  • இந்த வழக்கில் தொடர்புடைய சோலை, திருஞானம், கருப்பணன் ராமலிங்கம் என 4 பேர் வழக்கு நடைபெறும் காலத்தில் உயிரிழந்தனர்.

இன்று தீர்ப்பு

இந்நிலையில் இன்று விசாராணைக்கு இந்த வழக்கு வந்தது. அப்போது மீதமுள்ள 17 பேரையும் விடுதலை செய்வதாக மாவட்ட முதலாவது நடுவர் நீதிமன்ற நீதிபதி முத்துலெட்சுமி உத்தரவிட்டார்.

மேலும் அழகிரி தரப்பு வழக்கறிஞர் மோகன் குமார் இது குறித்து தெரிவிக்கையில், “இந்த வழக்கை அதிமுக ஆட்சியில் அரசியல் காரணத்திற்காக தாமதப்படுத்தினர். இந்த நிலையில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று நீதி கிடைத்துள்ளது. இந்த வெற்றியை நீதியை தலைவர் கலைஞருக்கு சமர்ப்பிக்கிறோம்” என தெரிவித்தார்.