தமிழ்நாடு

புதிய கட்சியா? வேறு கட்சிக்கு ஆதரவா? - ஆதரவாளர்களுடன் மு.க.அழகிரி இன்று ஆலோசனை

webteam

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தமது ஆதரவாளர்களுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

மதுரையில் தனியார் மண்டபத்தில் மாலை நடைபெற உள்ள ஆலோசனைக் கூட்டத்திற்கு, ஆதரவாளர்கள் 15 ஆயிரம் பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு புதிய கட்சி தொடங்குவதா, மீண்டும் திமுகவில் இணைவதா அல்லது ஏதெனும் ஒரு கட்சிக்கு ஆதரவு அளிப்பதா என்பது குறித்து மு.க.அழகிரி, ஆதரவாளர்களுடன் ஆலோசிக்க உள்ளார். வரும் சட்டமன்ற தேர்தலில் தமது பங்கு நிச்சயமாக இருக்கும் என ஏற்கனவே அவர் தெரிவித்து இருந்ததால், இன்று நடைபெற உள்ள ஆலோசனைக் கூட்டம் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மு.க.அழகிரியை பொருத்தவரை தனிக்கட்சி தொடங்குவார், மீண்டும் திமுகவில் இணைவார், பாஜகவில் சேர்வதற்கான வாய்ப்பிருக்கிறது, ரஜினி கட்சித் தொடங்கினால் அதில் சேர்வார், ரஜினியோடு கூட்டணி வைப்பார் என பல செய்திகள் வெளிவந்தன. ஆனால் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தப் போகிறேன் என்றும் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் எனது பங்களிப்பு மிக முக்கியமானதாக இருக்கும் என்றும் அழகிரி பேசியிருந்திருந்தார். இந்நிலையில் இன்று நடைபெற இருக்கும் ஆலோசனை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப் படுகிறது.