தமிழகத்தில் இன்னும் ஓரிரு தினங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதையொட்டிய லட்சத்தீவு பகுதிகளில் வரும் 19ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை நாளை தொடங்கலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தென்மேற்கு வங்கக்கடல் - பூமத்திய ரேகையை ஓட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில், ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இது, குமரிக்கடல் நோக்கி நகரும் நிலையில், வரும் 19ஆம் தேதி வாக்கில், தென்கிழக்கு அரபிக்கடலில், கேரளா, கர்நாடகா கரையை ஒட்டிய பகுதியில், ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலத்தின் இயல்பான மழை அளவு, 44 சென்டி மீட்டர். ஆனால், இந்த ஆண்டு, 50 சென்டி மீட்டர் வரை மழை பெய்யவாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
இன்று, கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, திண்டுக்கல், தேனி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், துாத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தீபாவளி வரை, பல்வேறு மாவட்டங்களில் கனமழைதொடரலாம் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், தியாகராய நகர், மயிலாப்பூர், சாந்தோம், வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழைபொழிந்து வருகிறது. பெரம்பூர், வியாசர்பாடி, கொருக்குப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.
குறிப்பாக, வியாசர்பாடி, சத்தியமூர்த்தி நகர், ொருக்குப்பேட்டை ஹை ரோடு உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர். ஓஎம்ஆர் சாலையிலும் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியுள்ளது.