RAIN ANI
தமிழ்நாடு

காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி; புயலாக மாற வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

Premkumar S

உலகளவில் நிலவிவரும் எல்நினோ தாக்கம் காரணமாக, இந்தியாவில் வழக்கமான அளவைவிட குறைவான மழையையே தென்மேற்கு பருவமழை கொடுத்திருக்கிறது. இதனால், விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப்பொருட்களின் தட்டுப்பாடு அதிகரித்திருக்கிறது. இந்தச்சூழலில் தான், தமிழகத்திற்கு அதிக அளவிலான மழையைக் கொடுக்கும் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 15ம் தேதி தொடங்கியிருக்கும் நிலையில், இயல்பான அளவிலேயே இந்த ஆண்டு மழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்திருக்கிறது.

இந்தச்சூழலில் தான், தென் கிழக்கு வங்கக்கடலில் நேற்று உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறியிருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, நாளை காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளதாகவும், தொடர்ந்து, நாளை மறுநாள் (அக்டோபர் 26) தாழ்வு மண்டலம் மேற்கு - வடமேற்கு திசையில் ஆந்திரா-ஒடிசா கடற்கரைப் பகுதிகளை நோக்கி நகரக வாய்ப்பிருப்பதாக சென்னை மண்டல ஆய்வுமையம் தெரிவித்திருக்கிறது.

இதனால், குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும் காற்று வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும், சேலம், ஈரோடு, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், நாளை முதல் 29ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் கடலில் இருக்கும் மீனவர்கள் கரைக்குத் திரும்ப வேண்டும் எனவும் பல்வேறு மாவட்ட மீன்வளத்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.