திருச்சி அருகே காதல் ஜோடிகள் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம், தொட்டியம் தாலுகா காடுவெட்டி கிராமத்தை சேர்ந்தவர் குப்புசாமி. இவரது மகன் நவீன்(23). மேஸ்திரியாக வேலை பார்த்து வந்தார். நாமக்கல் மாவட்டம் ஆலம்பட்டியைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மகள் சுஜிபாலா(17). நவீன் கட்டட வேலைகளுக்காக பேருந்தில் சென்றபோது சுஜி பாலாவுடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது.
நாளடைவில் இருவரும் காதலித்து வந்துள்ளனர். கடந்த மூன்று மாதங்களாக இருவரும் காதலித்து வந்த நிலையில் கடந்த 29ஆம் தேதி இருவரும் பெற்றோர்களுக்கு தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
இதையடுத்து சுஜிபாலாவின் தந்தை கணேசன் மோகனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில் ஊரின் எல்லையில் உள்ள ராமசாமி என்பவருக்கு சொந்தமான ஒரு குடிசை வீட்டில் காதல் ஜோடிகள் தங்கியிருந்துள்ளனர். ஆனால் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து தங்களை பெற்றோர்கள் பிரித்து விடுவார்கள் என அஞ்சிய இருவரும் அதே வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
காலையில் அவ்வழியே சென்றவர்கள் இதைப்பார்த்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.