தமிழ்நாடு

இ-பாஸ் கிடைக்கவில்லை: இரு மாநில எல்லையில் ஜோராக நடைபெற்ற கல்யாணம்..!

இ-பாஸ் கிடைக்கவில்லை: இரு மாநில எல்லையில் ஜோராக நடைபெற்ற கல்யாணம்..!

webteam

ஊரடங்கால் கோயம்புத்தூர் மாப்பிள்ளைக்கும் கேரள மணப்பெண்ணுக்கும் இரு மாநில எல்லையில் திருமணம் நடைபெற்றது. 

கேரளாவின் இடுக்கியை சேர்ந்த பிரியங்காவுக்கும் கோவை மாவட்டம் சரவணம்பட்டியைப் சேர்ந்த ரோபின்சனுக்கும் மார்ச் 22-ஆம் தேதி திருமணம் நடக்கவிருந்தது. ஆனால் திருமணம் பொது முடக்கத்தால் நடைபெறவில்லை. இதையடுத்து ஜூன் 7-ஆம் தேதி திருமணம் நடத்த முடிவெடுக்கப்பட்டது. இந்நிலையில் இதற்காக மணமகளும், மணமகனும் தனித்தனியே இடுக்கி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஆன்லைனில் "இ பாஸ்" பெற விண்ணப்பித்தனர். இதில் மணமகளுக்கு இரு மாநிலங்களிலும் இ பாஸ் கிடைத்தது. ஆனால் மணமகனுக்கு இடுக்கி மாவட்டத்தில் இ பாஸ் கிடைக்கவில்லை. 

எனவே தமிழக கேரள எல்லை பகுதியில் திருமணத்தை முடிக்க இருவீட்டாரும் ஏற்பாடு செய்தனர். இதன்படி இருமாநில எல்லையில் பாய் விரித்து தாம்பூலங்கள் மாற்றி திருமண சடங்குகளை செய்தனர். பெற்றோர், மற்றும் கேரள போலீஸார், சுங்கத்துறையினர், சுகாதாரத்துறையினர், வனத்துறையினர் முன்னிலையில் ரோபின்சன், பிரியங்கா திருமணம் செய்து கொண்டனர். மணமகளுக்கு கோவை மாவட்ட "இ பாஸ்" உள்ளதால் அவர் மணமகன் வீட்டாருடன் கோவை கிளம்பினார்.