சென்னை திருவேற்காடு பகுதியில் காதல் விவகாரம் காரணமாக இளம்பெண் செல்போன் கோபுரத்தின் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் பிரியா என்பவர் அதேப்பகுதியில் வசிக்கும் சபரி என்பவரைக் காதலித்ததாகக் கூறப்படுகிறது. கடந்த மாதம் சபரிக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் நடந்த நிலையில், பிரியா பூவிருந்தவல்லி மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தபோது அவர்கள் சமாதானப்படுத்தி அனுப்பியுள்ளனர். இந்நிலையில், திடீரென பிரியா தன் வீட்டருகே இருந்த செல்போன் கோபுரம் மீது ஏறி தற்கொலை செய்துகொள்ளப்போவதாக கூறி இருக்கிறார். தகவலறிந்து வந்த காவல்துறையினர் சுமார் ஒரு மணி நேர பேச்சுவார்த்தைக்கு பின்னர் பிரியவை கீழே இறக்கியுள்ளனர்.