நாமக்கல்லில் வைரஸ் காய்ச்சலுக்கு 7ஆம் வகுப்பு மாணவி உயிரிழந்தார்.
நாமக்கல் அடுத்துள்ள கொண்டமநாயக்கன்பட்டியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது மகள் அகல்யாவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் காய்ச்சல் இருந்து வந்துள்ளது. சேலத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அகல்யா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கொண்டமநாயக்கன்பட்டியில் மருத்துவ முகாம் அமைத்து காய்ச்சல் பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், நாகை மாவட்டம் தகட்டூர் கிராமத்தைச் சேர்ந்த வைத்தியநாதன் என்பவது 4 வயது குழந்தை ஜாஸ் ஹரீஸ் சிலநாட்களுக்கு முன் காய்ச்சலால் பாதிக்கப்பட்டது. அதனையடுத்து திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சையளித்துள்ளனர். அங்கிருந்து வீடுதிரும்பும் வழியில் குழந்தை வாந்தி எடுத்து உயிரிழந்தாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பலர் உயிரிழந்து வருகின்றனர். அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக கூறிவரும் நிலையில், காய்ச்சல் மரணங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. நேற்று ஒரே நாளில் மட்டும் திருவள்ளூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 10 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.