தமிழ்நாடு

லஞ்சம் பெறுவதற்காகவே தனி அலுவலகம்.. 17 மணி நேர சோதனையில் கட்டுகட்டாக சிக்கிய பணம், நகைகள்

webteam

மாசு கட்டுப்பாட்டு வாரியத்தை சேர்ந்த பொறியாளரின் வீட்டில் நடைபெற்ற சோதனையில், மூன்றே கால் கோடி ரூபாய் ரொக்கம், மூன்றரை கிலோ தங்கம், சொத்து ஆவணங்கள் உள்ளிட்டவை சிக்கியது அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கட்டு கட்டாக பணம், கிலோ கணக்கில் தங்கம், கோடிகளில் சொத்து, விடிய விடிய சோதனை என பரபரப்பாக காணப்பட்டது ராணிப்பேட்டை. இதற்கு காரணம் லஞ்ச ஒழிப்பு‌த்துறை மேற்கொண்ட அதிரடி நவடிக்கைதான். பல்வேறு நிறுவனங்களுக்கு அனுமதி வழங்க லஞ்சம் பெறுவதாக எழுந்த புகாரின் பேரில் வேலூர் மண்டல தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய இணை தலைமை சுற்றுச்சூழல் பொறியாளர் பன்னீர்செல்வம் கண்காணிப்பு வளையத்தில் கொண்டுவரப்பட்டார்.

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே பன்னீர்செல்வம் தங்கியிருந்த வாடகை வீட்டில் 13ஆம் தேதி இரவில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினர். அப்போது அங்கு அவர் லஞ்சம் பெறுவதற்காகவே தனியாக அலுவலகம் நடத்தி வந்தது தெரியவந்தது. பின்னர் அலுவலகம் மற்றும் அவரது காரில் இருந்து கணக்கில் வராத 33 லட்சத்து 73 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, பன்னீர்செல்வத்தின் சொந்த ஊரான ராணிப்பேட்டை பாரதி நகரில் உள்ள வீட்டிலும் சோதனை நடத்தினர். அங்கு 15 பேர் கொண்ட அதிகாரிகள் விடிய விடிய நடத்திய சோதனையில், கணக்கில் வராத 3 கோடியே 25 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய், ‌மூன்றரை கிலோ தங்கம் மற்றும் தங்கக் காசுகள், ஆறரைக் கிலோ வெள்ளிப்பொருள்களை கைப்பற்றியதாக தெரியவந்துள்ளது.

மேலும் சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய இடங்களில் உள்ள அசையாச் சொத்துக்கள் குறித்த 90 ஆவணங்களை கைப்பற்றியுள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். மாசு கட்டுப்பாட்டுவாரிய பொறியாளர் பன்னீர்செல்வத்தின் வீட்டில் நடந்த சோதனை 19 மணி நேரத்திற்கு பின்னர் இன்று காலை முடிவுக்கு வந்தது. சோதனையில் சிக்கிய பணம், நகை, ஆவணங்களை 4 இரும்பு பெட்டிகளில் அடைத்து துப்பாக்கி ஏந்திய போலீஸாரின் பாதுகாப்புடன் வேலூர் கருவூலத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தப்படும் நிலையில் இதில் பல்வேறு தகவல்கள் வெளிவரும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.