டீசல் விலை உயர்வை கண்டித்து இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது.
டீசல் தினசரி விலை உயர்வு, மூன்றாவது நபர் காப்பீட்டு தொகை கட்டணம் அதிகரிப்பு, சுங்க கட்டணம் உயர்வு போன்ற காரணங்களால் லாரி தொழில் நலிவடைந்து வருகிறது. எனவே டீசல் விலையை மூன்று மாதத்திற்கு ஒரு முறை நிர்ணயம் செய்ய வேண்டும், சுங்க கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிரதமருக்கு கடிதம் அனுப்பப்பட்டதாக லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் தெரிவித்தனர்.
ஆனால் இதுவரை தங்களது கோரிக்கை மீது மத்திய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். நாடு முழுவதும் 75 லட்சம் வாகனங்களும், தமிழகத்தில் மட்டும் 13 லட்சம் சரக்கு வாகனங்கள் இயக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளப்போவதில்லை என மணல் லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. ஜூலை 20ஆம் தேதி நடைபெற உள்ள வேலைநிறுத்தத்தில் பங்கேற்கப்போவதாகவும் அந்த அமைப்பு அறிவித்துள்ளது.