மத்திய அரசுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து கடந்த 8 நாட்களாக நடந்து வந்த வேலைநிறுத்த போராட்டத்தை வாபஸ் பெறுவதாக லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் கடந்த 20-ந் தேதி முதல் டீசல் விலையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வர வேண்டும். 3-வது நபர் காப்பீட்டு தொகையை குறைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். கடந்த 8 நாட்களாக நடைபெற்ற போராட்டத்தினால் லாரி உரிமையாளர்களுக்கு ஒரு நாளுக்கு ரூ.4 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டது. மத்திய அரசுக்கு ஒரு நாளுக்கு ரூ.25 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டது.
லாரி வேலை நிறுத்த போராட்டத்தினால் சரக்குகள் தேக்க நிலை ஏற்பட்டு, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்தது. இதனால் உடனடியாக மத்திய அரசு பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன. ஏற்கனவே மத்திய நிதி அமைச்சர் பியூஸ் கோயலுடன் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் 2 முறை பேச்சுவார்த்தை நடத்தி அது தோல்வி அடைந்தது.
இந்நிலையில் இன்று டெல்லியில் உள்ள போக்குவரத்து துறை அமைச்சக அலுவலகத்தில் அந்த அமைச்சகத்தின் செயலாளர் ஒய்.எஸ்.மாலிக் தலைமையில் லாரி உரிமையாளர்களின் நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தப் பேச்சுவார்த்தையில், லாரி உரிமையாளர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதாக தெரிகிறது. இதனையடுத்து கடந்த 8 நாட்களாக நடைபெற்ற வேலை நிறுத்த போராட்டத்தை முடித்துக்கொள்வதாக லாரி உரிமையாளர்கள் சங்கம் நிர்வாகிகள் அறிவித்துள்ளனர். இதனால் இன்று நள்ளிரவுடன் வேலை நிறுத்தம் முடிவுக்கு வருகிறது.