டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் தமிழகத்தில் லாரி சரக்குக் கட்டணம் 25 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதை லாரி புக்கிங் ஏஜென்ட்டுகள் சம்மேளனம் அறிவித்துள்ளது.
இந்தக் கட்டண உயர்வு நேற்று காலை முதல் அமலுக்கு வந்துள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு சுமார் 60 ரூபாயாக இருந்த ஒரு லிட்டர் டீசல் விலை, இப்போது 80 ரூபாயை நெருங்கியுள்ளது. எனவே, வேறு வழியின்றி சரக்கு லாரிகளின் வாடகை கட்டணத்தை 22 முதல் 25 சதவிகிதம் வரை உயர்த்தியுள்ளதாக லாரி புக்கிங் ஏஜென்ட்டுகள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
சேலத்தில் இருந்து சென்னைக்கு 8 ஆயிரத்து 500 ரூபாய் வசூலிக்கப்பட்ட சரக்கு வாடகை கட்டணம், 10 ஆயிரம் ரூபாயாகவும், சேலத்தில் இருந்து திருச்சி, கோவைக்கு 6 ஆயிரம் ரூபாயாக இருந்த கட்டணம் 7 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. லாரி வாடகை உயர்வால், காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரக்கூடும் அபாயம் உள்ளது.