தமிழ்நாடு

வேலூர்: பறக்கும் படையினர் கார் மீது லாரி மோதி விபத்து - தலைமை பெண் காவலர் உயிரிழப்பு

webteam

தேர்தல் பறக்கும்படையினர் சென்ற கார் மீது லாரி மோதிய விபத்தில் பெண் தலைமை காவலர் உயிரிழந்தார்.

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பி.கே.புரம் பகுதி தேர்தல் பறக்கும்படையினர் குடியாத்தம் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, குடியாத்தத்தில் இருந்து காட்பாடி நோக்கிச் சென்றுகொண்டிருந்த லாரி எதிர்பாரத விதமாக பறக்கும்படையினரின் கார் மீது மோதியது. இதில் கார் தலைகுப்புற கவிழ்ந்து நொறுங்கியது.

தலைமை பெண் காவலர் பலி

இதனை கண்ட அப்பகுதி மக்கள் காரில் இருந்தவர்களை மீட்டனர். ஆனால் வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் பெண் தலைமைகாவலராக பணியாற்றி வந்த மாலதி(45) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்தில் படுகாயமடைந்த ஒளிப்பதிவாளர் பிரகாஷம் மற்றும் மத்திய படை காவலர் மனோஜ் உள்ளிட்ட மூவரும் படுகாயத்துடன் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தகவலறிந்த மாவட்ட கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர் சம்பவ இடத்தை ஆராய்ந்தனர். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த கே.வி.குப்பம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு, தப்பியோடிய லாரி ஓட்டுனரை தீவிரமாக தேடி வருகின்றனர்.