கிருஷ்ணகிரியில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில் ஒரு மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் இராயக்கோட்டை மாநில நெடுஞ்சாலையில் ஜல்லி கற்களை ஏற்றிய டிப்பர் லாரியை தினேஷ் என்பவர் ஓட்டி வந்துள்ளார், வேகமாக வந்த டிப்பர் லாரி காரப்பள்ளி அருகே முன்னால் சென்ற வாகனத்தை முந்தி செல்ல முயன்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் லாரி நடுரோட்டிலேயே சாய்ந்தது,
அதேசமயம் ஓசூரிலிருந்து டி.குருபரப்பள்ளி கிராமத்திற்க்கு ஒரே குடும்பத்தை சேர்ந்த குழந்தை உட்பட மூவர் இருசக்கர வாகனத்தில் வந்துக்கொண்டிருந்தவர்கள் மீது டிப்பர் லாரியின் கதவு உறசியது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த யசோதம்மா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், மேலும் இருவர் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினர். மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் டிப்பர் லாரி மோதாதவாறு மயிரிழையில் தப்பினர். உயிரிழந்த யசோதம்மாவின் உடலை மீட்ட ஓசூர் நகர காவல்துறையினர், பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே ஜல்லி கற்களை ஏற்றி வந்த டிப்பர் லாரி நடுரோட்டில் சாய்ந்ததால், ஓசூர் - இராயக்கோட்டை மாநில நெடுஞ்சாலையில் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையில் கிடந்த ஜல்லி கற்களை காரப்பள்ளி கிராம மக்கள் அள்ளி சென்றனர்.