தமிழ்நாடு

கார்த்தி சிதம்பரம் மீதான லுக்அவுட் நோட்டீஸ் அக்டோபர் 4 வரை நீட்டிப்பு

Rasus

மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு எதிராக கொடுக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீஸை அக்டோபர் 4-ஆம் தேதி வரை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ப.சிதம்பரம் மத்திய அமைச்சராக இருந்தபோது ஐ.என்.எக்ஸ் மீடியா குழுமத்திற்கு, வெளிநாடு முதலீட்டு வாரியம் ஒப்புதல் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து ஐ.என்.எக்ஸ் நிறுவனத்துக்கு ஒப்புதல் அளித்தது தொடர்பாக கார்த்தி சிதம்பரத்தின் மீது சி.பி.ஐ வழக்குப் பதிவு செய்தது. இதைத்தொடர்ந்து கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்வதை தடுக்க சி.பி.ஐ சார்பில் லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. இந்த லுக் அவுட் நோட்டீஸை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் லுக்அவுட் நோட்டீசுக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.

இதனையடுத்து கார்த்தி சிதம்பரம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, வெளிநாட்டு வங்கிகளில் கார்த்தி சிதம்பரம் சட்டவிரோத பணப் பரிமாற்றம் செய்திருப்பதால், லுக் அவுட் நோட்டீசுக்கு தடை விதிக்கக் கூடாது என சிபிஐ சார்பில் முறையிடப்பட்டது. அதையேற்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு லுக்அவுட் நோட்டீஸை அக்டோபர் 4-ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்தார்.