தமிழ்நாடு

தொடர் கொள்ளை, வழிப்பறி - நீண்ட நாள் திருடனை பிடித்தது போலீஸ்

webteam

சென்னை அருகே நீண்ட நாட்களாக கொள்ளை மற்றும் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வந்த திருடனை காவல்துறையினர் கைது செய்தனர்.

சென்னை தாம்பரம் அடுத்த பீர்க்கன்காரணை சீனிவாச நகரை சேர்ந்தவர் மணிகண்டன் (32). இவரது வீட்டின் பூட்டை உடைத்து கடந்த 6ஆம் தேதி 6 சவரன் தங்க நகை, ரூ.1.5 லட்சம் பணம் கொள்ளை போனதாக பீர்க்கன்காரணை காவல் நிலையத்தில் புகார் அளிந்திருந்தார். புகாரின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய போலீஸார், அதில் இருந்த கொள்ளையனை தேடி வந்தனர். 

இந்நிலையில், பீர்க்கன்காரணை வேல் நகர் பேருந்து நிலையம் அருகே, சிசிடிவி காட்சியில் இருக்கும் நபர் போல ஒருவர் சுற்றித்திரிந்தார். அவரை போலீசார் காவல் நிலையம் அழைத்து சென்ற விசாரித்ததில், அவர் பெயர் மகபுல் பாஷா (21) என்பதும், பெரும்பாக்கத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது, மேலும் அவர் தான் வீட்டில் கொள்ளையடித்தது என்பதையும் ஒப்புக் கொண்டார். இதையடுத்து அவரிடம் இருந்து 12 சவரன் தங்க நகை பறிமுதல் செய்யப்பட்டது.

மணிகண்டன் வீடு மட்டுமின்றி சேலையூரில் உள்ள ஒரு வீட்டில் மூன்றரை சவரனும், பீர்க்கன்காரணையில் உள்ள ஒரு வீட்டில் 2 சவரனும் அவர் கொள்ளையடித்துள்ளார், இதுதவிர சிட்லபாக்கத்தில் 2 சவரன் நகை வழிப்பறி செய்துள்ளார். அவர் மீது வழக்குப்பதிவு செய்த பீர்க்கன்காரணை போலீசார், தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.