தமிழ்நாடு

அரசு ஊழியர் நீண்டகால பணியிடை நீக்கம் - பணி வழங்க நீதிமன்றம் உத்தரவு

அரசு ஊழியர் நீண்டகால பணியிடை நீக்கம் - பணி வழங்க நீதிமன்றம் உத்தரவு

webteam


ஊழல் வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்ட அரசு ஊழியர்களை நீண்டகாலம் பணியிடை நீக்கத்திலேயே வைத்திருப்பதை தவிர்க்க வேண்டும் என உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலக கண்காணிப்பாளராக பணியாற்றியவர் அன்னபூரணி. இவர் கடந்த 2012ம் ஆண்டு ஊழல் குற்றச்சாட்டில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதனையடுத்து தொடர்ந்து ஏழு ஆண்டுகளாக தன்னை பணியிடை நீக்கம் செய்து வைத்திருப்பது நியாயமற்றது என்று கூறியும், மீண்டும் தன்னை பணியில் சேர்க்க கோரியும் அன்னபூரணி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்திபன், அரசு ஊழியரை நீண்டகாலமாகப் பணியிடை நீக்கத்தில் வைத்திருப்பது என்பது விரைவாக விசாரிக்க வேண்டிய விசாரணைதானே என்றும் இது நியாயம் பெறும் உரிமையை பாதிக்கும் என்றும் குறிப்பிட்டு, அன்னபூரணிக்கு மீண்டும் பணி வழங்க உத்தரவிட்டார்.

மேலும் ஊழல் வழக்குகளில் சிக்கும் அரசு ஊழியர்களை நீண்டகாலம் பணியிடை நீக்கத்தில் வைத்திருப்பதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதி, பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர்கள், இடைநீக்க காலத்தில் எந்தப் பணியும் செய்யாமல் ஜீவனப்படியை பெறுவதால் அரசுக்கு இழப்பு ஏற்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.