பாகிஸ்தான் தூதரகம் pt desk
தமிழ்நாடு

லண்டன் | பாகிஸ்தான் தூதரகம் முன் போராடிய இந்தியர்களை பார்த்து கொடூரமாக சைகை செய்த அதிகாரி!

லண்டனில் பாகிஸ்தான் தூதரகத்தின் முன் போராடிய இந்தியர்களை பார்த்து, பாகிஸ்தான தூதரக அதிகாரி ஒருவர் கழுத்தை அறுப்பது போன்ற சைகை செய்த காணொளி இணையத்தில் வைரலாகியுள்ளது.

Uvaram P

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த தீவிரவாத தாக்குதலில் 26 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்த கொடூர தாக்குதலை அரங்கேற்றிவிட்டு தப்பிய பயங்கரவாதிகளை அடையாளம் கண்டு, அவர்களை பிடிக்க தேடுதல் பணி தொடர்ந்து வருகிறது. இதனிடையே, பஹல்காம் தாக்குதலின் எல்லை தாண்டிய பயங்கரவாத தொடர்புகளை கருத்தில் கொண்டு பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது இந்தியா.

jammu kashmir

26 பேரின் உயிரைப் பறித்த பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்கு பாகிஸ்தான் அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று இந்தியா கூறியுள்ளது. குறிப்பாக சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்திவைக்கப்போவதாக அறிவித்துள்ளது இந்தியா. இதனால் பாகிஸ்தானில் கடுமையான நீர்ப் பற்றாக்குறை ஏற்படும் என்று கூறப்படுகிறது. இந்தியாவில் பல்வேறு இடங்களில் தீவிரவாத தாக்குதலுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்நிலையில், தீவிரவாத தாக்குதலைக் கண்டிப்பதற்காக லண்டனில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்துக்கு முன்பு கூடிய என்.ஆர்.ஐ இந்தியர்கள், பாகிஸ்தானுக்கு நீர் கிடைக்காது ஏன்பதைக் கிண்டலடிக்கும் வகையிலான முழக்கங்களை எழுப்பினர்.

அப்போது போராட்டத்தில் பங்கேற்ற இந்தியர்களைப் பார்த்து பாகிஸ்தான் அதிகாரி செய்த செயல் கண்டனங்களைப் பெற்றுள்ளது. ஆம், போராட்டக்காரர்களைப் பார்த்து கழுத்தை அறுப்பது போன்ற சைகை செய்திருக்கிறார் பாகிஸ்தான் தூதரக அதிகாரி. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். பாகிஸ்தான் அதிகாரியின் செயலுக்கும், இந்தியர்கள் சிலரின் செயலுக்கும் பலர் காட்டமான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.