லண்டன் கிங்ஸ் மருத்துவமனையின் கிளையை தமிழகத்தில் தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கையெழுத்தானது.
வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் விதமாக இங்கிலாந்து, அமெரிக்கா, அமீரகம் ஆகிய மூன்று நாடுகளுக்கு முதலமைச்சர் பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். முதற்கட்டமாக லண்டன் சென்றுள்ள அவருக்கு லண்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனைத்தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் பணி மேம்பாட்டுக்காக சர்வதேச திறன் மேம்பாட்டு நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இதே போல் தமிழகத்தில் டெங்கு, மலேரியா போன்ற நோய்களை ஏற்படுத்தும் கொசுக்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக லண்டன் ஸ்கூல் ஆஃப் ஹைஜீன் மற்றும் டிராபிகல் மெடிசின் நிறுவனத்துடன் நோக்க அறிக்கை கையெழுத்தானது.
லண்டன் கிங்ஸ் மருத்துவமனையின் கிளைகளை தமிழகத்தில் நிறுவுவது தொடர்பாக அதன் நிர்வாகத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோட் - சூட் அணிந்து கலந்து கொண்டார். அவருடன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அத்துறையின் செயலர் பீலா ராஜேஷ் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். பின்னர் லண்டனில் ஆம்புலன்ஸ் மற்றும் அதன் கால் சென்டரின் இயக்கம் ஆகியவற்றை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் பார்வையிட்டார்.