தமிழ்நாடு

வெளியானது சோபியா எஃப்ஐஆர் நகல்..!

Rasus

விமானத்தில் பாரதிய ஜனதாவை விமர்சித்தற்காக சோபியா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆர் நகல் வெளியாகி உள்ளது.

நெல்லை மாவட்டத்தில் நிகழ்ச்சியில் பங்கேற்க சென்னையில் இருந்து விமானம் மூலம் பாரதிய ஜனதா மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தூத்துக்குடி சென்றார். கனடாவில் ஆராய்ச்சி படிப்பு மேற்கொண்டுள்ள சோபியா, அந்த விமானத்தில் பெற்றோருடன் வந்து கொண்டிருந்தார். தமிழிசையின் பின் இருக்கையில் பயணித்த சோபியா, பாரதிய ஜனதாவை விமர்சித்து முழக்கம் எழுப்பியுள்ளார். தொடர்ந்து விமான நிலைய வளாகத்திற்குள்ளும் பாரதிய ஜனதாவை விமர்சித்துள்ளார். இதன் காரணமாக விமானநிலையத்திலேயே வாக்குவாதம் ஏற்பட்டது. 

இந்நிலையில் விமான நிலைய இயக்குநர் சுப்பிரமணியன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் சோபியா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்ற எண் 285/18 ஐபிசி 290, 75 (1)  ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து தூத்துக்குடி நடுவர் நீதிமன்ற நீதிபதி தமிழ்செல்வி இல்லத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சோபியாவை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. மருத்துவ பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்ட சோபியா, உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதையடுத்து ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதையேற்று அவருக்கு நீதிபதி தமிழ்ச்செல்வி ஜாமீன் வழங்கினார். இந்நிலையில் சோபியா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆர் நகல்கள் வெளியாகி உள்ளன.