தமிழ்நாடு

ஊரடங்கால் வீட்டில் இறக்கிவிட்ட போலீஸ் : ஜாமீனில் வெளியான கைதிகள் நெகிழ்ச்சி

ஊரடங்கால் வீட்டில் இறக்கிவிட்ட போலீஸ் : ஜாமீனில் வெளியான கைதிகள் நெகிழ்ச்சி

webteam

தமிழகத்தில் கொரானோ தடுப்பு நடவடிக்கையாக ஜாமீனில் வெளிவந்த கைதிகளை ஊரடங்கின் காரணமாக வீடு வரை போலீஸார் அழைத்துச்சென்று விட்டனர்.

தமிழகம் முழுவதும் கொரானோ தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தடையை மீறி வெளியே சுற்றுபவர்களை கண்காணித்து அவர்களை கைது செய்து வாகனங்களை பறிமுதல் செய்து வருகின்றனர். தமிழக சிறைகளிலும் கொரானோ தடுப்பு நடவடிக்கைகள் சிறைத்துறை தலைவர் டிஜிபி சுனில்குமார்சிங் மேற்பார்வையில் மும்முரமாக நடந்து வருகிறது.

தமிழகம் முழுவதும் 9 மத்திய சிறைகள், 9 மாவட்ட சிறைகள், 95 துணை சிறைகள் மற்றும் 3 பெண்கள் சிறப்பு சிறைகள் உள்ளன. இந்த சிறைகளில் உள்ளவர்களில் 70 சதவீதம் பேர் விசாரணைக் கைதிகளாகவும் எஞ்சிய 30 சதவீதம் பேர் தண்டனைக் கைதிகளாகவும் உள்ளனர். கூட்டமாக ஒரே இடத்தில் இருப்பதால் அவர்களுக்கு கொரோனா வருவதற்குரிய வாய்ப்புகள் அதிகம் என்பதால்,.சிறிய குற்றங்களில் ஈடுபட்டுள்ள விசாரணை கைதிகளை ஜாமினில் வெளியே அனுப்ப நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறைத்துறை அதிகாரிகள் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி, கொரோனா தொடர்பாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாளில் இருந்து இன்று வரை கடந்த 10 நாட்களில் 3,963 சிறைக்கைதிகள் ஜாமினில் விடுவிக்கப்பட்டதாக சிறைத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர். அத்துடன் ஜாமீனில் விடுவிக்கப்படும் சிறைக்கைதிகள் அவர்களது சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு சென்னை நகர போலீசாரே வாகனங்கள் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளனர். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் போன்ற ஊர்களைச் சேர்ந்த கைதிகளை போலீசாரே பாதுகாப்பாக அழைத்துச் சென்று வீடுகளில் கொண்டு போய் விடுகின்றனர். ஊரடங்கு நேரத்தில் ஜாமீனில் விடுதலை செய்தது மட்டுமின்றி, பத்திரமாக வீடு வரை கொண்டு சென்று விடுவதால் கைதிகள் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதுதவிர சென்னை புழல் சிறையில் உள்ள கைதிகள் மூலம் ஒரு நாளைக்கு 31,000 முகக்கவசங்கள் தயாரிக்கப்படுவதாக சிறைத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர். இந்த பணியில் 150 கைதிகள் ஈடுபட்டுள்ளனர். சிறையில் உள்ள துணி தைக்கும் தொழிலகத்தில் கைதிகள் மூலம் இவை தயாரிக்கப்படுகின்றன. ஒரு நாளைக்கு 8 மணி நேரம் முகக்கவசம் தைக்கும் பணியில் கைதிகள் ஈடுபடுகின்றனர். இதுவரை 1.80 லட்சம் முகக்கவசங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. மூன்றடுக்குகள் கொண்ட தரமாக தயாரிக்கப்படும் இந்த முகக்கவசங்களில் அடக்கவிலை ரூ.10 ஆகும். நியாயமான விலைக்கு காவல்துறையினருக்கு முகக்கவசங்கள் கிடைக்க வேண்டுமென்பதற்காக கைதிகள் மூலம் இவை தயாரிக்கப்படுவதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.