தமிழ்நாடு

ஊரடங்கில் வீட்டில் தங்கிய ஆண்கள்.. அதிகரித்த குடும்ப வன்முறை: ஸ்பீடு காட்டிய காவல்துறை..!

ஊரடங்கில் வீட்டில் தங்கிய ஆண்கள்.. அதிகரித்த குடும்ப வன்முறை: ஸ்பீடு காட்டிய காவல்துறை..!

jagadeesh

ஊரடங்கின் போது தமிழகம் முழுவதும் கடந்த 24 நாட்களில் குடும்ப வன்முறை தொடர்பாக வந்த 2,953 புகார்களில் பெண்கள் குற்றத்தடுப்புப்பிரிவு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு சுமூகமாக தீர்த்துள்ளதாக ஏடிஜிபி ரவி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்றுப்பரவாமல் தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கின் போது ஆண்கள் வெளியில் செல்லாமல் வீட்டில் முடங்கிக் கிடப்பதால் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்படும் சூழ்நிலை உருவாகி பெண்கள் தாக்கப்படும் சம்பவங்கள் நடைபெற்றன.

இது தொடர்பாக தமிழகத்தில் உள்ள பெண்கள், குழந்தைகள் குற்றத்தடுப்புப்பிரிவு கூடுதல் டிஜிபி ரவி எச்சரிக்கை விடுத்து பேட்டி அளித்தார். தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் ஏடிஎஸ்பிக்கள் மேற்பார்வையில் பெண்களுக்கெதிரான குற்றங்களை கண்காணிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் அந்தந்த அனைத்து மகளிர் காவல் நிலையங்களுடன் இணைந்து பெண்கள் பிரச்சினைகள் தொடர்பான புகார்கள் மீது விசாரணை நடத்தி வந்தனர். பெண்கள் மீது தாக்குதல் நடத்திய நபர்கள் கைது செய்யப்பட்டனர். சிலர் எச்சரித்து அனுப்பப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் 24ம் தேதிவரையில் குடும்ப வன்முறை தொடர்பாக வரும் புகார்கள் நேரில் சென்று தீர்க்கப்பட்டுள்ளதாக ஏடிஜிபி ரவி தெரிவித்துள்ளார். மேலும், “ஏப்ரல் 1ம் தேதி முதல் 24ம்தேதி வரை 100 மற்றும் 112 என்ற போலீஸ் கட்டுப்பாட்டு அறை எண்கள் மூலம் பெண்களுக்கெதிராக 732 புகார்கள் வந்துள்ளன. அதில் 722 அழைப்புகளில் அனைத்து மகளிர் போலீசார் நேரில் சென்று பேசி சமாதானப்படுத்தியுள்ளனர். மீதம் உள்ள பத்து வழக்குகளில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 8 பேர் தலைமறைவாகியுள்ளனர்.

அதே போல காவலன் செயலியான எஸ்ஓஎஸ் மூலம் 5 அழைப்புகள் வந்தன. அவை அனைத்துமே எந்த பிரச்சினையும் இன்றி முடித்து வைக்கப்பட்டுள்ளன. மேலும் மகளிர் உதவி மைய சேவை எண்களான 1091 மூலம் 16 புகார்களும், 1098 மூலம் 557 புகார்களும், 181 மூலம் 542 புகார் அழைப்புகளும் வந்தன. இவற்றில் பெரும்பாலும் அனைத்து அழைப்புகளிலுமே பெண் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கவுன்சிலிங் மூலம் பிரச்சினையை பேசி தீர்த்து வைத்துள்ளனர்.

1098 மூலம் வந்த 557 புகார்களும் போலீசாரின் புலனாய்வில் உள்ளன. இந்த கடந்த 24 நாட்களில் குடும்ப வன்முறை தொடர்பாக 2,963 புகார்கள் கட்டுப்பாட்டு அறை மூலமும் பெண்கள் உதவிமைய சேவை எண்களிலும் வந்துள்ளன. இவற்றில் 2 புகார்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 8 பேர் தலைமறைவாகி விட்டனர். இந்த நடவடிக்கை தொடரும்" என்று ஏடிஜிபி ரவி கூறியுள்ளார்.