தமிழ்நாடு

சென்னையில் காணும் பொங்கலை காணா பொங்கலாக மாற்றிய முழு ஊரடங்கு

நிவேதா ஜெகராஜா

காணும் பொங்கலான இன்று, முழு ஊரடங்கு காரணமாக சென்னையின் முக்கிய சுற்றுலா தளங்கள் அனைத்தும் களையிழந்து ஆள் ஆரவாமின்றி காணப்பட்டன.

பொங்கல் பண்டிகை என்றாலே போகிப் பொங்கல், தைப் பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என தொடர்ந்து கொண்டாட்டங்களுக்கு பஞ்சமிருக்காது. இதில் சென்னையில் கொண்டாட்டங்களுக்கு கூடுதல் மவுசு இருக்கும். அந்தவகையில் பொங்கல் மற்றும் மாட்டுப் பொங்கலன்று வீடுகளில் கொண்டாட்டங்களை முடித்த சென்னை மக்கள், பின் காணும் பொங்கலன்று குடும்பத்துடன் பொழுதுபோக்கு மையங்களாக திகழக்கூடிய மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரைகள், தலைவர்களின் நினைவிடங்கள், கிண்டி சிறுவர் பூங்கா உள்ளிட்ட இடங்களுக்கு சென்று நாள் முழுவதையும் செலவிடுவது வழக்கம்.

இதனால் ஒவ்வொரு ஆண்டும் காணும் பொங்கலன்று காலை முதலே இந்த இடங்களில் மக்கள் கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கத் தொடங்க, மாலை வேளையில் மக்கள் நெருக்கம் அதிகரித்து காணப்படும். ஆனால் இந்த ஆண்டு தங்களை காண யாரும் வரவில்லை. கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், அந்த ஆண்டு மக்கள் கூட்டத்தால் நிரம்பிய பகுதிகள், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கால் இந்த ஆண்டு ஆள் அரவமின்றி, களையிழந்து காணப்படுகின்றன.

இந்நிலையில் மக்களை எச்சரிக்கும் காவல்துறை அறிவிப்புகள், கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் தன்னார்வலர்கள், உணவுப் பொருட்கள் முதல் விளையாட்டு பொருட்கள் வரை விற்பதற்காக எழுப்பப்படும் குரல்கள் என ஒவ்வொரு ஆண்டும் காதைப்பிளக்கும் காணும் பொங்கல், இந்த ஆண்டு காணா பொங்கலாக நிசப்த நிலையில் இருக்கிறது.