உள்ளாட்சி ஜனநாயகத்தை முடக்கும் அதிமுக அரசின் நடவடிக்கைக்கு மாநிலத் தேர்தல் ஆணையம் இடமளிக்காமல், உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்ற உயர்நீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அவசர அவசரமாக உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கையை வெளியிட்டு, ஆளுங்கட்சிக்கு சாதகமான நிலைப்பாட்டை மாநிலத் தேர்தல் ஆணையம் எடுத்ததாகச் சாடியுள்ளார்.
இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டதாலும், அதிமுக என்ற பெயரைப் பயன்படுத்தக் கூடாது எனத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டதாலும், உள்ளாட்சித் தேர்தலை நடத்த அரசு முன்வரவில்லை என்று ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
உள்ளாட்சித் தொகுதி மறுசீரமைப்பு ஆணையம் ஒன்றை அவசர அவசரமாக அமைத்து தேர்தலை மேலும் தாமதப்படுத்த அதிமுக அரசு முயற்சித்ததாகவும் அறிக்கையில் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
வரலாறு காணாத வறட்சி நிலவுகிறது, குடிநீர் கிடைக்கவில்லை என ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்கள் வந்துள்ளது எனக் காரணங்களை அடுக்கி மீண்டும் உள்ளாட்சித் தேர்தலுக்கு உலை வைக்க அரசு முற்பட்டதாக கூறியுள்ள ஸ்டாலின், இந்த சூழ்நிலையில் உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை, உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தை கேட்டுக்கொண்டுள்ளார்.