தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு அக்டோபர் இறுதியில் வெளியிடப்படும் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த உத்தரவிடுமாறு மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கினைத் தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது உள்ளாட்சித் தேர்தலை ஏன் நடத்தவில்லை என நீதிபதிகள் எழுப்பிய கேள்விக்கு, மக்கள் தொகை கணக்கெடுப்புபடி தொகுதி மறுவரை செய்யும் பணி நடந்ததால் தான் தேர்தலை நடத்த முடியவில்லை என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து மீண்டும் விசாரணைக்கு வந்தபோது உள்ளாட்சித் தேர்தலை நடத்த அக்டோபர் 31 ஆம் தேதி வரை அவகாசம் கேட்கப்பட்டது.
இந்நிலையில், தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு அக்டோபர் இறுதியில் வெளியிடப்படும் என மாநில தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதையடுத்து தேர்தல் ஆணையத்தின் பதிலை ஏற்று வழக்கை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம்.