தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்து வரும் நிலையில் அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு ஏற்கனவே விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது.
இதில், கனமழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 18 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை, விழுப்புரம், தஞ்சாவூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், ராமநாதபுரம், திண்டுக்கல், காஞ்சிபுரம், திருவாரூர், அரியலூர், திருவண்ணாமலை, கரூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 17 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலியில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை தொடர்பாக புதிய தலைமுறையிடம் பேசிய சுயாதீன வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான், “சென்னையில் விட்டு விட்டு சில இடங்களில் கனமழை பெய்து வருகிறது. மேகங்கள் மீண்டும் உருவாகி வரும் நிலையில், சில மணி நேரங்களில் மீண்டும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இன்று மாலை வரையே விட்டு விட்டு சென்னையில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
டெல்டா மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி மன்னார் வளைகுடா, தென் தமிழகம் வழியாக கேரள செல்வதைப் பார்க்க முடியும். இதன் காரணமாக இன்று இரவு முதல் தென் தமிழகத்திற்கு நல்ல மழைக்கான வாய்ப்பு இருக்கிறது. குறிப்பாக, ராமேஸ்வரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, தூத்துக்குடி, தென்காசி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்பு இருக்கிறது. நாளை காலை வரை கனமழை இருக்கும். காற்றழுத்த தாழ்வு நிலை அரபிக்கடலுக்குள் சென்றபின் படிப்படியாக மழை குறைய வாய்ப்புள்ளது.
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது. நிலப்பகுதி வழியாகவே செல்வதால் புயலாக வலுப்பெற ஒரு சதவீதம் கூட வாய்ப்பு இல்லை. கொடைக்கானல் மற்றும் மாஞ்சோலை பகுதிகளில் கனமழைக்கான வாய்ப்பு இருக்கிறது” எனத் தெரிவித்தார்.
கனமழை காரணமாக சென்னை அடுத்துள்ள செம்பரம்பாக்கம் ஏரி 85% நிரம்பியுள்ளது. கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 713 கன அடியாக அதிகரித்துள்ளது. ஏரியின் மொத்த கொள்ளளவான 3,645 மில்லியன் கன அடியில், 2,903 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக சேலம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 20 மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சாத்தனூர் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன்காரணமாக, சாத்தனூர் அணையில் இருந்து நீர்வெளியேற்றம் படிப்படியாக அதிகரிக்கப்படும் என வருவாய்த்துறை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த செம்பியன்மகாதேவியை சேர்ந்த முருகதாஸ் என்பவரது மகன் கவியழகன். இவர் செம்பியன்மகாதேவி அரசு உயர்நிலைப் பள்ளியில் 8ம்வகுப்பு படித்து வருகிறார்.
நேற்றிரவு முருகதாஸ், அவரது மகன் கவியழகன் மற்றும் அவரது மகள் என குடும்பத்தினருடன் உறங்கிக் கொண்டிருந்தார். இந்நிலையில் கனமழை காரணமாக வீட்டின் பக்கவாட்டுச் சுவர் இடிந்து விழுந்தது. இதில் கவியழகன் பலத்த காயமடைந்தார்.
இடிபாடுகளில் சிக்கிய வரை அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஒரத்தூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், கவியழகன் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். அவரது தந்தை மற்றும் தங்கை சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.
இந்த சம்பவம் குறித்து வேளாங்கண்ணி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாகை அருகே கனமழையால் சுவர் இடிந்து விழுந்ததில் பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் அக்கிராமத்தில் பெறும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் கனமழை பெய்வதால் விமான சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 7 விமானங்களின் புறப்பாடு மற்றும் 5 விமானங்களில் வருகையில் தாமதம் ஏற்பட்டுள்ளது. காற்றுடன் பலத்த மழை பெய்வதால் விமானங்கள் தரையிறங்குவதில் சிக்கம் நீடிக்கிறது.
சென்னையில் சுரங்கப்பாதைகளில் தண்ணீர் பெரிய அளவில் தேங்கவில்லை என மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது. சுரங்கப்பாதைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
தஞ்சாவூரில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று காலை முதல் பரவலாக விட்டு விட்டு மழை பெய்து வந்த நிலையில் நேற்று இரவு தொடங்கிய கனமழை தற்போது வரை நீடித்து வருகிறது. குறிப்பாக கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, செங்குன்றம், புழல், சோழவரம், பழவேற்காடு, மீஞ்சூர், கவரப்பேட்டை, புதுவாயல், திருவள்ளூர், ஊத்துக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக செங்குன்றத்தில் 6 சென்டி மீட்டரும், பூந்தமல்லியில் 5 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. திருத்தணியில் 4.5 செ.மீ., சோழவரத்தில் 4.3 செ.மீ., தாமரைப்பாக்கம் மற்றும் கும்மிடிப்பூண்டி ஆகிய பகுதிகளில் தலா 4 செ.மீ., மழை பதிவாகி இருக்கிறது பொன்னேரியில் 3.7 செ.மீ. திருவள்ளூரில் 3.6 செ.மீ., ஆவடியில் 3.6 செ.மீ. ஊத்துக்கோட்டையில் 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலையில் தொடங்கிய கனமழை தொடர்ந்து இரண்டு மணி நேரத்திற்கு மேலாக பெய்து வருகிறது. ஆத்தூர், கெங்கவல்லி, நடுவலூர், தெடாவூர், நரசிங்கபுரம், மஞ்சினி, பைத்தூர், அம்மம்பாளையம்,காட்டுக்கேட்டை, மல்லியகரை,கொத்தாம்பாடி, உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு வார காலமாக மழை ஓய்ந்திருந்த நிலையில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது.
மழை தொடர்பாக சுயாதீன வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் புதிய தலைமுறையிடம் பிரத்யேகமாக தகவல் தெரிவித்தார். அவர் கூறுகையில், தமிழகத்தில் இன்றும் நாளையும் பரவலாக மழை எதிர்பார்க்கலாம். இன்றைய தினம் கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் விட்டு விட்டு மழையை எதிர்பார்க்கலாம். அவ்வப்போது கனமழையாக இருக்கக்கூடும்.
நாளை மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் மழையின் தாக்கம் அதிகரிக்கும். கடலோர மாவட்டங்களில் மழை குறையக்கூடும். இன்று வடகடலோர மாவட்டங்களிலும் டெல்டா மாவட்டங்களிலும் பகல் நேரத்தில் விட்டு விட்டு மழைக்கான வாய்ப்பு இருக்கிறது. அவ்வப்போது கனமழையாக இருக்கக்கூடும். இன்று இரவு உள் மாவட்டங்களிலும், பிற மாவட்டங்களிலும் மழையை எதிர்பார்க்கலாம். ஒட்டுமொத்தமாக தமிழகம் முழுவதும் பரவலான மழைக்கு இன்று வாய்ப்பு இருக்கிறது. கனமழைக்கான வாய்ப்பு இருக்கிறது.
டெல்டா மாவட்டங்களிலும் பரவலாக கன முதல் மிககனமழை பதிவாகியுள்ளது. நாளையும் டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழைக்கான வாய்ப்பு இருக்கிறது. ஒட்டுமொத்த தமிழகத்திலும் டிசம்பர் 14 மற்றும் 15 என இரு தினங்கள் மழைப் பொழிவு குறைந்து காணப்படும். மீண்டும் அடுத்த சுற்று மழைப்பொழிவு டிசம்பர் 16 ஆம் தேதி மாலை முதல் தொடங்கும். ஏனெனில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி டிசம்பர் 14 ஆம் தேதி அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவாவதற்கான சாதகசூழல் காணப்படுகிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தைப் பொருத்தவரை இன்று கனமழைக்கான வாய்ப்பு இருக்கிறது. நாளை மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. ஃபெஞ்சல் புயலின்போதே அதிக மழைப்பொழிவை சந்தித்த மாவட்டமாக இருப்பதால், தற்போதைய சூழலில் இந்த குறுகிய மழைப்பொழிவின் தாக்கமே அதிகமாக இருக்கும். ஏனெனில் மண்ணின் ஈரப்பதம் அதிகரித்துள்ளது, நீர்நிலைகளிலும் அதிகளவில் நீர் காணப்படுவதால் சற்று கவனமாக இருப்பது நல்லது.
ஃபெஞ்சல் புயல் புயல் சின்னமாகவே இருந்து வலுவிழக்காமல் மழைப்பொழிவைக் கொடுத்தது. இது அப்படிப்பட்ட தீவிரமான நிகழ்வு அல்ல. எனவே பெருமழையாக இல்லாமல், பரவலான மழைக்கு மட்டுமே வாய்ப்பு இருக்கும்” எனத் தெரிவித்தார்.
சேலம் மாவட்டத்தின் ஆத்தூர், ஓமலூர், மேட்டூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதல் கன மழை பெய்து வருவதால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா ? என மாணவ மாணவிகள் காத்திருந்த நிலையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி உத்தரவிட்டார்.
பள்ளிகளுக்கு விடுமுறை உத்தரவு தாமதமாக காலை 7:45 மணிக்கு வெளியான நிலையில் வெளியூரிலிருந்து வரும் மாணவ மாணவிகள் பள்ளிகளுக்கே வந்துவிட்டனர். பள்ளிகளுக்கு விடுமுறை என தெரிவிக்கப்பட்ட நிலையில், மாணவ மாணவிகள் மழையில் நனைந்தபடியே மீண்டும் தங்களது வீடுகளுக்கு சென்றனர்.
மாவட்ட நிர்வாகத்தின் பள்ளி விடுமுறை உத்தரவு தாமதத்தால் பல்வேறு பகுதிகளிலிருந்து பள்ளிகளுக்கு சென்ற மாணவ மாணவிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினார்.
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து முன்னெச்சரிக்கையாக நீர் திறப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. துணை ஏரிகள் நிரம்பி வருவதால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ள நிலையில் அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவண்ணாமலையில் சாத்தனூர் அணை நீர் திறப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது 13,000 கன அடியாக இருக்கும் நீர்த்திறப்பை அடுத்து, தென் பெண்ணையாற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் மேட்டூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நள்ளிரவு முதலே தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் குளிர்ச்சியான தட்பவெட்ப நிலை நீடித்து வந்த நிலையிலும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதித்தது. இந்த நிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அதிகாலை முதலே மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து வந்த நிலையில் சேலம் மாவட்டத்தில் மட்டும் விடுமுறை குறித்த அறிவிப்பு வெளிவராமல் இருந்தது.
இதன்காரணமாக 10 மற்றும் 12 ஆம் வகுப்புக்குச் செல்லும் மாணவ மாணவிகளை அழைத்துச் செல்லும் பேருந்துகள் வந்ததால் ஏராளமான பள்ளி மாணவர்கள் விடுமுறை அறிவிப்பு வருவதற்கு முன்பாகவே பள்ளிக்கு சென்று விட்டனர். அதன் பிறகு சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி காலதாமதமாக விடுமுறை அறிவித்த காரணத்தால் மழையில் நனைந்தவாரே பள்ளிக்குச் சென்ற மாணவ மாணவிகளை மீண்டும் தங்களது சொந்த ஊருக்கு அழைத்துச் சென்றனர். இதனால் மாணவ மாணவிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆனானதோடு மழை தொடர்ந்து பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் வெகுவாக பாதித்தது.
திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. அதன்படி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம், பூண்டி, கண்ணன்கோட்டை ஆகிய நீர்த்தேக்கங்களுக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது.
புழல் ஏரியில் நேற்று நீர்வரத்து இல்லாத நிலையில் காலை நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 629 கனஅடியாகவும், சோழவரம் ஏரிக்கு நீர்வரத்து 94 கனஅடியாகவும், பூண்டி ஏரிக்கு நீர்வரத்து 1,290 கனஅடியாகவும், கண்ணன்கோட்டை நீர்த்தேக்கத்திற்கு வினாடிக்கு 40 கன அடியாகவும் நீர்வரத்து உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து காலை நிலவரப்படி 713 கன அடியாக அதிகரித்துள்ளது. ஏரியின் மொத்த நீர்மட்டமான 24 அடியில் 21 புள்ளி 18 அடியை எட்டியுள்ளது. ஏரியின் நீர்இருப்பு தற்போது 2 ஆயிரத்து 903 மில்லியன் கனஅடியாக உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் துணை ஏரிகள் நிரம்பி வருவதால், செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏரியில் இருந்து உபரிநீர் திறந்துவிடுவது குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
சென்னையின் குடிநீர் ஆதரமான பூண்டி ஏரியில் இருந்து 1000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. பூண்டி ஏரியின் மொத்த அடியான 35 அடியில் நீர்மட்டம் 34.05 அடியை எட்டியதால் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. விநாடிக்கு 3,500 கன அடி நீர் வரத்து உள்ள நிலையில், 1000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டுள்ளது.
பூண்டி ஏரி திறக்கப்பட்டுள்ளதாக் கொசஸ்தலை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொசஸ்தலை ஆற்றின் இருபுறமும் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. நம்பாக்கம், கிருஷ்ணாபுரம், தாமரைப்பாக்கம், புதுக்குப்பம், மணலி, எண்ணூர் பகுதி மக்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென்காசி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மூன்று மாவட்டங்களுக்கு ரெட் அலார்ட் எச்சரிக்கை விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில், தென்காசி மாவட்டத்தில் இன்று அதிகாலை முதல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது.
இந்த நிலையில், மதியம் முதல் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், தற்போது மாவட்டத்தில் உள்ள அனைத்து துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தயார் நிலையில் இருக்க தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் அறிவுரை வழங்கியுள்ளார்.
குறிப்பாக, தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பேரிடர் கட்டுப்பாட்டு அறைக்கு சென்ற மாவட்ட ஆட்சித் தலைவர் அனைத்து தாலுகாக்களில் உள்ள வட்டாட்சியர்களை தொடர்பு கொண்டு தயார் நிலையில் இருக்கவும், மழை தொடர்பான தகவல்களை உடனுக்குடன் கட்டுப்பாட்டு அறைக்கு தெரியப்படுத்தவும் அறிவுரை வழங்கிய நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும் அனைத்து துறை அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.