நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் நாளை அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகின்ற ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க., கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட பல கட்சிகள் இடம்பெற்றுள்ளன. காங்கிரஸ் கட்சி புதுச்சேரி உள்ளிட்ட 10 இடங்களில் போட்டியிடுகிறது. இந்தக் கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை அறிவித்து பரப்புரையில் ஈடுபட தொடங்கிவிட்டன.
ஆனால் தேசிய கட்சியான காங்கிரஸ் தனது வேட்பாளர்களை இதுவரை அறிவிக்காமல் உள்ளது. அதற்கு சில உள்கட்சி விவகாரம் தான் காரணம் என அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.இதனால் காங்கிரஸ் கட்சி தங்களது வேட்பாளர்களை அறிவிப்பதில் தொடர்ந்து ககாலதாமதம் நீடித்து வருகிறது. ஆனால் காங்கிரஸ் கட்சி 6 கட்டங்களாக வேட்பாளர் பட்டியலை இதுவரை வெளியிட்டுள்ளது. அதில் சோனியா ரேபரேலி தொகுதியிலும், ராகுல் அமேதி தொகுதியிலும் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் நாளை அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. அதில் கரூரில் ஜோதிமணியும், சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம், திருச்சியில் திருநாவுக்கரசர் ஆகியோர் போட்டியிடுவதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தமிழகத்தில் போட்டியிடுவாரா என்று எழுந்துள்ள எதிர்பார்ப்புக்கும் விடை கிடைக்கும் என்றே தெரிகிறது.