தமிழ்நாடு

திருவிழா போல் மதுக்கடையில் கூட்டம் ! ஆந்திர எல்லைக்கு படையெடுத்த தமிழக மது பிரியர்கள் !

webteam

ஆந்திர மாநிலத்தில் மதுபான கடைகள் திறக்கப்பட்டு உள்ளதால் தமிழக மாநில எல்லையோரங்களில் உள்ள மதுபான கடைகளில் மக்கள் கூட்டம் நிறைந்து வழிகிறது.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த ஆந்திர மாநில எல்லை ஓரம் ஒட்டியுள்ள நாக பூண்டி எனுமிடத்தில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த மதுபானக்கடை இன்று நண்பகல் திறக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தைச் சேர்ந்த மதுப் பிரியர்கள் அங்கு படையெடுத்துள்ளனர்.

144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் கடந்த 40 நாட்களாக மது விற்பனை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மது பிரியர்கள் மது அருந்த முடியாமல் திண்டாடி வந்தனர். மேலும் சில மது பிரியர்கள் தாமாகவே சாராயம் தயாரிப்பில் ஈடுபட்டு கைதும் ஆகியுள்ளனர்.

இந்நிலையில் தற்போது தமிழக எல்லையோரங்களில் உள்ள ஆந்திர மாநிலத்தில் 144 தடை உத்தரவு தளர்வு அளித்து மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. தமிழகத்தைச் சேர்ந்த ஆந்திர மாநில எல்லை ஓரங்களில் உள்ள மக்கள் தற்போது மதுக்கடைகளுக்கு மது வாங்குவதற்கு படையெடுத்துள்ளனர்.

மதுக் கடைகளில் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளதால் காவல்துறையினர் மதுப் பிரியார்களை வரிசையில் நிற்க வைத்து வாங்க சொல்லி வருகின்றனர்.