தமிழ்நாடு

மதுபானக் கடை விவகாரம்: நீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு

மதுபானக் கடை விவகாரம்: நீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு

webteam

மதுபானக் கடைகளை மூட வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபானக் கடைகளை மூட கடந்த ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை அடுத்து தமிழகத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மதுபானக் கடைகள் மூடப்பட்டன. இந்த நிலையில் இது தொடர்பாக விளக்கம் கேட்டு தொடரப்பட்ட வழக்கில், மாநில நெடுஞ்சாலைகளை நகராட்சி சாலைகளாக மாற்றி அறிவிப்பு வெளியிட்டு, கடைகளை திறக்கலாம் என கூறியது. தொடர்ந்து தமிழக அரசு மூடப்பட்ட ஆயிரத்து 700 மதுபானக் கடைகளை மீண்டும் திறக்க அறிவிப்பு வெளியிட்டது.

அறிவிப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தமிழகத்தில் நெடுஞ்சாலைகளை உள்ளாட்சி அமைப்பு சாலைகளாக மாற்றாமல் திறக்கப்பட்ட மதுபானக் கடைகளை உடனடியாக மூட உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தின் உத்தரவால் சுமார் 5 ஆயிரம் கோடிக்கு மேல் வருமான இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக அரசு கூறியுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.