தவெக கண்டன ஆர்ப்பாட்டம் pt web
தமிழ்நாடு

தர்மபுரி | போராட்டத்தில் காவலரின் கையை கடித்த தவெக இளைஞர் கைது.!

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் உள்ள சொகுசு மது பாரை அகற்ற வலியுறுத்தி நடந்த போராட்டத்தில், காவலர் ஒருவரின் கையை கடித்த சம்பவத்தில் தவெகவினர் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், 12 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

PT WEB

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு தக்காளி மார்க்கெட் அருகே மனமகிழ் மன்றம் என்ற பெயரில் புதிதாக தனியார் மதுபான பார் ஒன்று திறக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த மதுபான பார் அரசுப் பள்ளி மாணவர்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக உள்ளது. எனவே, சொகுசு மதுபான கடையை அகற்ற வலியுறுத்தி, தவெக-வினர் நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, திடீரென தவெகவினர் மதுபானக் கடையின் நுழைவாயிலில் கயிறு கட்டி பாதுகாப்பில் இருந்த காவல் துறையினரை மீறி, உள்ளே நுழைந்து மதுபானக்கூடத்தின் மீது தாக்குதல் நடத்தினர்.

கையை கடித்த தவெக நிர்வாகி

இந்நிலையில், காவல்துறையினருக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட தவெக தொண்டர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்பொழுது திடீரென தவெக தொண்டர் ஒருவர் காவலரின் கையை கடித்தார். ஆனால், அதிர்ஷ்ட வசமாக காவலருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை.

இதையடுத்து, காவலரின் கையை கடித்த தவெக நிர்வாகியில் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது. இந்நிலையில், காவலரின் கையை கடித்த ஜெமினி என்பவரை கைது செய்து பாலக்கோடு காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். மேலும் இந்த விவகாரத்தில், ஜெமினி உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 12 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.