தமிழ்நாடு

சென்னையில் லேசான மழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்

சென்னையில் லேசான மழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்

webteam

வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ஃபோனி புயல் மிக அதி தீவிரப் புயலாக வலுப்பெற்றுள்ளதால், வங்கக் கடல் பகுதியில் பலத்த காற்று வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஃபோனி புயல் சென்னைக்கு வடகிழக்கே 470 கிலோ மீட்டர் தொலைவில் தற்போது மையம் கொண்டுள்ளதாகவும், அது மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் 3ஆம் தேதி ஒடிஷா மாநிலத்தின் பூரி பகுதியில் கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. எனவே, ‌வங்கக் கடல் பகுதியில் 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மீனவர்கள் மத்திய மேற்கு வங்ககடல் பகுதிக்குச் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கிலிருந்து வரும் வாடைக் காற்று வெப்பத்துடன் வீசியதே நேற்று சென்னையில் சிறிது நேரத்திற்கு 104 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானதற்குக் காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.