தமிழ்நாடு

''தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு''- வானிலை ஆய்வு மையம்

''தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு''- வானிலை ஆய்வு மையம்

webteam

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கத்தில் 7 சென்டி மீட்டரும், ஒட்டன்சத்திரம், கடலூரில் தலா 6 சென்டி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் ஆங்காங்கே பல்வேறு இடங்களில் மழை பெய்துள்ளது. சேலம் மாவட்டம் மேட்டூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் அநேக இடங்களில் பரவலாக சாரல் மழை பெய்தது. தஞ்சை மாவட்டம் திருவையாறில் கனமழை பெய்தது.புதுக்கோட்டை, ஆலங்குடி, கீரமங்கலம், திருமயம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் விட்டு விட்டு மழை பெய்தது.

தருமபுரி மாவட்டத்தில், நல்லம்பள்ளி, தருமபுரி, பென்னாகரம், பாலக்கோடு, காரிமங்கலம், பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பரவலாக சாரல் மழை பெய்தது. மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் கருங்காலக்குடி, தும்பைப்பட்டி, கீழவளவு, கீழையூர், வண்ணாம்பாறைப்பட்டி, வெள்ளலூர், மலம்பட்டி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக கனமழை பெய்தது.