புதுக்கோட்டையில் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட 68 வயது முதியவருக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு 7 லட்ச ரூபாய் நஷ்ட ஈடாக அரசு தரவேண்டும் என்றும் புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி கலிஃபுல்லா நகரைச் சேர்ந்தவர் அஸ்ரப் அலி. வயது 68. இவர் அதே பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமியை கடந்த 3.9.2018 அன்று பாலியல் வன்கொடுமை செய்ததாக ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் அஸ்ரப் அலியை கைது செய்தனர்.
இந்த வழக்கு புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது வழக்கை விசாரித்த நீதிபதி ராஜலட்சுமி, 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த அஸ்ரப் அலிக்கு வாழ்நாள் சிறை தண்டனையும் ஆயிரம் ரூபாய் அபராதமும் கட்டத்தவறினால் மேலும் 6 மாத கால சிறைத்தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு நஷ்ட ஈடாக 7 லட்ச ரூபாய் அரசு தர வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதிக்கலாம் என்று மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள நிலையில் புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம், போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட ஒருவருக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.