கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் வாழ்ந்த இல்லத்தை புனரமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அந்த இல்லம் சிதிலமடைந்து இடிந்து விழும் அபாயத்தில் உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் ஒழுகினசேரியில் 1908ஆம் ஆண்டு நவம்பர் 29ஆம் தேதி என்.எஸ்.கிருஷ்ணன் பிறந்தார். அவருக்கு இன்று 109வது பிறந்தநாள். நாடக கொட்டகையில் தனது வாழ்க்கையை தொடங்கிய என்.எஸ்.கிருஷ்ணன், பகுத்தறிவுச் சிந்தனையைத் தூண்டும் தனது நகைச்சுவை கருத்துகளால் ஆயிரத்து தொள்ளாயிரத்து முப்பதுகளில் திரைத்துறையில் கொடிகட்டிப் பறந்தார். அவர் ஏராளமான மக்களுக்கு பல்வேறு உதவிகளைச் செய்திருப்பதாக கூறுகின்றனர் அப்பகுதியினர். வாழ்ந்த காலத்தில் வள்ளலாக திகழ்ந்த அவரது இல்லம் தற்போது சிதிலமடைந்து இடிந்து விழும் அபாயத்தில் இருப்பதாக அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
என்.எஸ் கிருஷ்ணனுக்கு பெருமை சேர்க்கும் விதமாக நாகர்கோவில் மணிமேடை சந்திப்பில் 1972ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர், கலைவாணருக்கு சிலை வைத்து சிறப்பு சேர்த்தார். ஆனால், அவரது நினைவை போற்றும்விதமாக உள்ள இல்லத்தை சீரமைக்க நெடுங்காலமாக தமிழக அரசிடம் வலியுறுத்தி வருவதாக என்.எஸ்.கிருஷ்ணனின் பேத்தி கூறுகிறார்.