தமிழகம் மற்றும் புதுவையில் இன்று 8 மாவட்டங்களில் மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கிழக்கு திசை காற்று மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக, சனி, ஞாயிறு ஆகிய இரு நாட்களும் தமிழகம் மற்றும் புதுவையில் பல இடங்களில் கன மழை பெய்தது. இந்நிலையில் இன்றும் மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலூர், புதுச்சேரி, விழுப்புரம், தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் மிக கன மழை பெய்யும் என்றும், சென்னையில் மிதமானது முதல் மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்கலாமே : கனமழை காரணமாக இன்று ஒன்பது மாவட்டங்களுக்கு விடுமுறை
நாகை, காரைக்கால், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. அதேநேரத்தில் நாளை முதல் மழை படிப்படியாக குறையும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும், அரபிக் கடலில் உருவாகியுள்ள இரு காற்றழுத்த தாழ்வு பகுதிகள் மேலும் வலுவடையும் எனவும் கூறியுள்ளது. லட்சத் தீவு பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் இன்று லட்சத்தீவு பகுதிக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை 5.30 மணியுடன் முடிவடைந்த 9 மணி நேரத்தில், சென்னை மீனம்பாக்கம் மற்றும் புதுச்சேரியில் தலா 4 சென்டி மீட்டரும், சென்னை நுங்கம்பாக்கம், திருத்தணியில் தலா 3 சென்டி மீட்டரும், திருச்சி, குன்னூர், கே.பரமத்தி ஆகிய இடங்களில் தலா 2 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.