நடுநிலை இதழியலாக மக்களிடையே பெயர்பெற்ற புதிய தலைமுறை தொலைக்காட்சி, அரசு கேபிளில் கடந்த வாரம் முதல் தெரியாதது குறித்து பொதுமக்கள் கேள்விகளை முன்வைக்கின்றனர். இதுதொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியும் உரிய பதில் தரப்படவில்லை. இந்நிலையில், அரசு கேபிள் நிறுவனத்திலிருந்து புதிய தலைமுறை நீக்கப்பட்டதற்கு அரசியல் கட்சித்தலைவர்கள் பலரும் தங்கள் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றன.
அரசு கேபிள் இணைப்புகளில் பெரும்பாலான இடங்களில் ‘புதிய தலைமுறை’ தெரியாத சூழலில், இது தொடர்பாக தமிழக அரசுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறார் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன்.
அதில், அரசு கேபிளில் புதிய தலைமுறை தொலைக்காட்சி முடக்கப்பட்டதாக வரும் தகவல்கள் கண்டிக்கத்தக்கது என்றும், பத்திரிகை சுதந்திரத்துக்கு எதிராக செயல்படுவதை மக்கள் விரும்ப மாட்டார்கள் என்றும் அவர் கூறியிருக்கிறார். புதிய தலைமுறை தொலைக்காட்சி, அரசு கேபிளில் மீண்டும் ஒளிபரப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
1975 எமர்ஜன்ஸி காலத்தில் இந்திரா காந்தி பத்திரிகைகளின் குரல்வளை நசுக்கியது போல, திமுக அரசு, ஊடகங்களின் மீது எமர்ஜன்ஸியை விதித்திருப்பதாக, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் குற்றம்சாட்டியுள்ளார். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசு கேபிளில் புதிய தலைமுறை நீக்கப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டி விமர்சித்துள்ளார்.
கேபிளில் இருந்து புதிய தலைமுறை நீக்கப்பட்டிருப்பது சர்வாதிகாரத்தின் உச்சம் என்றும், நடுநிலையான புதிய தலைமுறை மீது திமுக அரசுக்கு அச்சம் ஏற்ப்பட்டுள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். ராமேஸ்வரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், செய்தி சேனல்களுக்கு வாய்ப்பூட்டு சட்டம் போட்டு உண்மை முகத்தை மறைக்க முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அரசு கேபிளில் புதிய தலைமுறை நீக்கப்பட்டிருப்பதை கண்டித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் கே.எஸ். அழகிரி, சரிசெய்யப்பட வேண்டிய, தவிர்க்கப்பட வேண்டிய விஷயம் இது என்றும் முதல்வர் இதனை சரிசெய்வார் என்றும் கூறியுள்ளார்.
இந்த சம்பவத்திற்கு கருத்து தெரிவித்துள்ள அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், “அரசு நிர்வாகத்திற்கும் மக்களுக்கும் இணைப்பு பாலங்களாகச் செயல்படும் ஊடகங்களை முடக்க முனைவது கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரானது மற்றும் ஜனநாயகத்திற்கு விரோதமானது. ஜனநாயகத்தின் நான்காம் தூண்களாகப் போற்றப்படும் ஊடகங்கள், அதன் பணியில் சுதந்திரமாக ஈடுபட அனுமதிக்கும் வகையில், புதிய தலைமுறை தொலைக்காட்சியை அரசு கேபிளில் மீண்டும் ஒளிபரப்ப அரசு கேபிள் நிர்வாகத்தையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
அரசு கேபிளில் புதிய தலைமுறை தொலைக்காட்சி நீக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “புதிய தலைமுறை கரூர் சம்பவம் தொடர்பாக உண்மையான செய்திகளை வெளியிட்டது. இதன் காரணமாக அரசு நடத்தும் கேபிள் டிவி-யில் இருந்து நீக்கப்பட்டுள்ளது, இதனை வன்மையாக கண்டிக்கிறோம். மேலும் இது ஒரு கோழைத்தனம் என்று தெரிவித்திருக்கிறார். தொடர்ந்து, உண்மை வெளிவந்தால் உங்களுக்கு என்ன பயம் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.