தமிழ்நாடு

விசாரணைக் கைதிகள் மரணம்: தாமாக முன்வந்து விசாரிக்க உயர் நீதிமன்றத்தில் முறையீடு

webteam

சாத்தான்குளம் விசாரணைக் கைதிகள் இருவர் உயிரிழந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் முறையீடு செய்துள்ளார்.

சாத்தான்குளம் காமராஜர் சிலை அருகே செல்போன் கடை நடத்தி வந்தவர் ஜெயராஜ்(56). இவருடைய மகன் பென்னிக்ஸ்(31). கடந்த 19-ந்தேதி இரவு ஊரடங்கு விதிகளை மீறி கடை நடத்தியதாக இவர்கள் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த சாத்தான்குளம் போலீசார் கோவில்பட்டி சிறையில் விசாரணை கைதிகளாக அடைத்தனர்.

சிறையில் பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜ் மர்மமான முறையில் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த உயிரிழப்புக்கு தமிழகம் முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. விசாரணைக் கைதிகளின் உயிரிழப்பு குறித்து முறையான விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

இந்நிலையில் விசாரணைக் கைதிகள் இருவர் உயிரிழந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சூரியப்பிரகாசம் என்பவர் முறையீடு செய்துள்ளார். அவரின் முறையீட்டில், விசாரணைக் கைதிகளை இயந்திரத்தனமாக காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டதால் இருவரும் இறந்திருக்கிறார்கள். எனவே இந்த விவகாரத்தில் நீதித்துறையின் பங்கு குறித்தும் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்து தகுந்த உத்தரவை பிறப்பிக்கவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

பதிவுத்துறைக்கு கடிதம் அளித்தால் நாளை இதுதொடர்பாக வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், கிருஷ்ணகுமார் அமர்வு தெரிவித்துள்ளது