சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தனது கருத்து தொடர்பாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனிடம் நடிகர் லாரன்ஸ் நேரில் விளக்கம் அளித்தார்.
இந்த சந்திப்பு குறித்து தனது முகநூல் பக்கத்தில் லாரன்ஸ் பதிவிட்டுள்ளார். அதில், “அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் மேடையில் நான் கூறிய ஒரு கருத்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் குறித்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டு விமர்சிக்கப்பட்டது. எனது பேச்சு வேண்டுமென்றே தவறாக திரித்துப் பரப்பப்படுகின்றது என்று ஏற்கனவே நான் விளக்கமளித்துள்ளேன்.
இந்நிலையில் இன்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனை நான் நேரில் சந்தித்து விளக்கமளித்தேன். எனது விளக்கத்தை ஏற்றுக்கொண்ட அவர் என்னை அன்புடன் நலம் விசாரித்து வழியனுப்பினார். அவருக்கு என் நன்றியினையும் என் அன்பையும் இதன் மூலம் தெரிவித்துக் கொள்கின்றேன்” எனத் தெரிவித்துள்ளார்.