தமிழ்நாடு

பாஸ்போர்ட்டை வங்கியில் ஒப்படைக்க சட்டத் திருத்தம் - நீதிமன்றம் அறிவுரை

பாஸ்போர்ட்டை வங்கியில் ஒப்படைக்க சட்டத் திருத்தம் - நீதிமன்றம் அறிவுரை

webteam

கடன் பெற்றுவிட்டு வெளிநாடுகளுக்கு தப்புவதை தடுக்க பாஸ்போர்ட்டை வங்கியில் ஒப்படைக்க சட்டத் திருத்தம் தேவை என மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அறிவுரை வழங்கியுள்ளது. 

புதுக்கோட்டை நிலையூர் அங்கன்வாடி ஊழியர் மங்களம் போலி பாஸ்போர்டில் சிங்கப்பூர் சென்று வந்ததாக அவர் பணிநீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் தனது பணிநீக்கத்தை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தார், இந்த வழக்கு இன்று நீதிபதி வைத்தியநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மங்களத்தின் பணி நீக்கம் செய்யப்பட்டது சரிதான் என்று தீர்ப்பு வழங்கியுள்ளார். 

மேலும் நீதிபதி தெரிவித்த தீர்ப்பில்,“பகுதி நேர பணியாளராக இருந்தாலும் பணியில் அர்ப்பணிப்பு மனப்பான்மை இருக்க வேண்டும். விருப்பமில்லாத வேலையை செய்வதற்கு பதில் அந்தப் பணியிலிருந்து விலகுவதே சிறந்ததாக இருக்கும். போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாடு சென்ற மங்களம் ஒரு வாரம் சிறைத்தண்டைனை அனுபவிக்க வேண்டும். மங்களம் மற்றும் போலி பாஸ்போர்ட்டுக்கு உதவிய ராக்கம்மாள் ஆகியோர்களின் ரேசன் கார்டை பறிமுதல் செய்ய வேண்டும். இரு குடும்பத்திற்கும் அரசு உதவிகள், சலுகைகள் வழங்க கூடாது” என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் கடன் பெற்றுவிட்டு வெளிநாடு தப்புவதை தடுக்க பாஸ்போர்ட்டை வங்கியில் ஒப்படைக்க சட்டத் திருத்தம் தேவை என மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது. அதில் கடன் பெறுவோர் வங்கிகளில் பாஸ்போர்ட்டை சமர்ப்பிக்கும் வகையில் விதிகளை உருவாக்க வேண்டும். கடனைத் திருப்பி செலுத்தாவிட்டால் பாஸ்போர்ட்டை தற்காலிகமாக ரத்து செய்ய வேண்டும். கடனை அடைக்கும் வரை பாஸ்போர்ட் ஒப்படைக்கப்படாது என்றும் அறிவிக்க வேண்டுமென கூறியுள்ளது.