தமிழ்நாடு

காணாமல்போன நரிக்குறவர் குழந்தையை மீட்க உதவும் லதா ரஜினிகாந்த்

காணாமல்போன நரிக்குறவர் குழந்தையை மீட்க உதவும் லதா ரஜினிகாந்த்

Rasus

காஞ்சிபுரம் மாவட்டம் அணைக்கட்டு காவல்நிலையம் அருகே காணாமல் போன நரிக்குறவர் தம்பதியின் குழந்தை மும்பையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் அணைக்கட்டு காவல்நிலையம் அருகே நரிக்குறவர் தம்பதியின் குழந்தையான ஹரிணி கடந்த 100 நாட்களுக்கு முன் காணாமல் போனார். குழந்தையை எங்குத் தேடியும் காணாததால் பெற்றோர்கள் தவித்து வருகின்றனர். போலீசாரும் குழந்தையை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இருந்தாலும் குழந்தையை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்நிலையில் நரிக்குறவர் தம்பதியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ரஜினிகாந்தின் மனைவியான லதா ரஜினிகாந்த் பேசியுள்ளார். அதுதொடர்பான ஆடியோவும் வெளியாகி உள்ளது. ஆடியோவில், ஹரிணியின் சாயலில் மும்பையை அடுத்துள்ள ஜோகிந்தர் ரயில் நிலையத்தில் குழந்தை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், அது குறித்து விசாரித்து உறுதி செய்ய மும்பை காவல் ஆணையரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் லதா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

அத்துடன் குழந்தையை கண்டுபிடிக்க தங்கள் குழுவினரும் கடந்த சில மாதங்களாகவே முழு முயற்சியில் ஈடுபட்டு வருவதாவும், குழந்தை சீக்கிரம் மீட்கப்பட்டுவிட்டால் மகிழ்ச்சியடைவேன் எனவும் லதா ரஜினிகாந்த் கூறியுள்ளார். அத்துடன் தங்கள் அமைப்பை சேர்ந்தவர்கள் உங்களுக்கு உதவுவார்கள் எனவும் நரிக்குறவ தம்பதியிடம் லதா ரஜினிகாந்த் உறுதி அளித்துள்ளார்.

குழந்தைகளை பாதுகாக்கும் விதமாக லதா ரஜினிகாந்த் ‘குழந்தைகளுக்‌கான அமைதி’ என்ற அமைப்பை சமீபத்தில் தொடங்கினார். இந்நிலையில் அந்த அமைப்பு மூலம் காணாமல் போன ஹரிணியை மீட்கும் முயற்சியில் லதா ரஜினிகாந்த் ஈடுபட்டுள்ளார்.