அமைச்சரவை Pt web
தமிழ்நாடு

தவெக அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டம்.. முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு!

தமிழக முதல்வராக விஜய் பதவியேற்ற பிறகு, தவெக தலைமையிலான புதிய அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டம் இன்று(ஜூன் 05) நடைபெறுகிறது.

Premkumar S

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களில் வென்று தனிப்பெருங்கட்சியாக தவெக உருவெடுத்தாலும், ஆட்சியமைக்க போதிய இடங்கள் கிடைக்காத நிலையில், காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல் மற்றும் இடதுசாரிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்திருக்கிறது. அக்கட்சியின் தலைவர் விஜய் மே-10ம் தேதி தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். அவருடன் சேர்த்து 9 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.

தொடர்ந்து, மே 21 மற்றும் மே 22-ம் தேதிகளில் நடந்த அமைச்சரவை விரிவாக்கங்களில் முறையே 23 மற்றும் 2 அமைச்சர்கள் பதவியேற்ற நிலையில், தற்போதைய தமிழக அரசின் அமைச்சர்களின் எண்ணிக்கை 35-ஆக உயர்ந்திருக்கிறது. இதில், கவனிக்கத்தக்க விஷயமாக, காங்கிரஸ், விசிக மற்றும் ஐயூஎம்எல் கட்சிகள் அமைச்சரவையில் இணைந்திருக்கின்றனர். அதேசமயம், நேற்றைய முன்தினம் ஒவ்வொரு மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது.

இந்தசூழலில் தான், தலைமைச்செயலகத்தில் இன்று காலை 11 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு நடக்கும் முதல்வர் அமைச்சரவைக் கூட்டம் என்பதால், பொதுமக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மேகதாது அணை விவகாரம், புதிய திட்டங்களை தொடங்குவது, தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் பெறுவது, புதிதாக தொழில் தொடங்கவுள்ள நிறுவனங்களுக்கு அனுமதியளிப்பது உள்ளிட்ட விவகாரங்களில் முக்கிய முடிவுகள் இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.