தமிழ்நாடு

"நீதி கிடைக்குமென நம்புகிறேன்" - கொலை செய்யப்பட்ட முன்னாள் எம்.பி மஸ்தானின் மகன் உருக்கம்

webteam

மறைந்த முன்னாள் திமுக எம்.பி மஸ்தான் கொலை வழக்கில் “நீதி கிடைக்கும் என்று நம்புகிறோம்” என அவரது மகன் டாக்டர் ஹரிஷ் ஷாநவாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை சேப்பாக்கத்தைச் சேர்ந்த முன்னாள் திமுக எம்.பி.யும், மாநில சிறுபான்மையினர் ஆணையத் துணைத் தலைவருமான மஸ்தான் கடந்த 22 ஆம் தேதி சென்னையில் இருந்து திருச்சி நோக்கிச் சென்றபோது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக தகவல் வெளியானது.

இதைத் தொடர்ந்து அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட நிலையில், மஸ்தான் முகத்தில் காயம் இருந்ததால் கூடுவாஞ்சேரி போலீசார் இந்த வழக்கை சந்தேக மரணம் என மாற்றி விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில் மஸ்தானின் உறவினர்களே அவரை திட்டமிட்டு கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது.

பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னையில் ஐந்து பேர் திட்டமிட்டு மஸ்தானை கொலை செய்துள்ளனர் என்பதும், இதன் பின் நெஞ்சுவலியால் மஸ்தான் இறந்ததாக கூறியுள்ளனர் என்பதும் தெரிவந்தது. இதையடுத்து போலீசார் 5 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்நிலையில் மறைந்த மஸ்தானின் மகன் டாக்டர் ஹரிஷ் ஷாநவாஸ் புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில், “எனது அப்பாவின் மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டதை அடுத்து காவல் துறையினரிடம் புகார் கொடுத்திருந்தோம். இதையடுத்து உடல் பிரேத பரிசோதனை முடிவுகள் மற்றும் காவல் துறையினர் நடத்திய விசாரணை ஆகியவற்றின் அடிப்படையில், 5 பேர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். நீதி கிடைக்கும் என்று நம்புகிறோம். குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை கிடைக்க வேண்டும். விரைவாக குற்றவாளிகளை கைது செய்த தமிழக முதல்வர் மற்றும் தமிழக காவல் துறையினருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறினார்.