தமிழ்நாடு

டெல்டா மாவட்டங்களில் கொட்டித்தீர்த்த மழை

டெல்டா மாவட்டங்களில் கொட்டித்தீர்த்த மழை

webteam

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், டெல்டா மாவட்டங்களில் அதிகளவு மழை பெய்துள்ளதாக வருவாய் நிர்வாக ஆணையர் சத்ய கோபால் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், நாகை, திருவாரூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் தண்ணீர் தேங்கி நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சென்னையில் கடந்த 3 மூன்று நாட்களாக பெய்த கனமழையால் பல இடங்களில் தண்ணீர் தேங்கிய நிலையாக காணப்படுகிறது. இருப்பினும் அரசு அதிகாரிகள் மற்றும் காவலர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளால் ஆங்காங்கே இருந்த தண்ணீர் விரைவாக அகற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் மழைப்பொழிவின் அளவு குறைந்திருந்தாலும், டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளது.

இதுதொடர்பாக பேட்டியளித்துள்ள வருவாய் நிர்வாக ஆணையர் சத்ய கோபால், தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தை பொறுத்த வரை, திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் பகுதியில் 14.2 செ.மீ, நாகை மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி பகுதியில் - 18.7 செ.மீ
, தலைஞாயிறு பகுதியில் - 12.5 செ.மீ, நகரப்பகுதியில் -15.4 செ.மீ, மயிலாடுதுறை பகுதியில் - 7 செ.மீ மழையும் பெய்துள்ளது என்று தெரிவித்துள்ளார். இதன்படி கடந்த 24 மணி நேரத்தில் டெல்டா மாவட்டங்களில், குறிப்பாக நாகை மாவட்டத்தில் தான் அதிகளவு மழை பெய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே நாகை மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்க கூடிய இடங்களை கண்டறிந்து அங்கிருந்த மக்களை முகாம்களில் தங்க வைத்துள்ளதாகவும், அவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.