அதிமுக ஆட்சி காலத்தில் வழங்கப்பட்டு வந்த லேப்டாப் வழங்கும் திட்டம், 2019ஆம் ஆண்டுடன் நிறுத்தப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக அதிமுக ஆட்சி காலத்தில் மாணவர்களுக்கு லேப்டாப் அளிக்கப்படவில்லை.
மேலும், பலர் இந்த திட்டம் மீண்டும் கொண்டுவரப்படவேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்நிலையில், 2025-26ஆம் நிதியாண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட்டில் அடுத்த 2 ஆண்டுகளில் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும் என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்திருந்தார்.
இதில், முதற்கட்டமாக அடுத்த இரண்டு ஆண்டுகளில் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு அவரவர் விருப்பத்தின் அடிப்படையில் ஒவ்வொருவருக்கும் கைக்கணினி அல்லது மடிக்கணினி வழங்கப்படும் என்றும் எதிர்காலத்தில் உயர் தொழில்நுட்ப உலகில் நமது இளைஞர்கள் அறிவாயுதம் ஏந்தி வெற்றிவலம் வருவதை உறுதிசெய்திடும் நோக்கில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும். இத்திட்டத்திற்காக 2025-26 ஆம் நிதி ஆண்டில் 2000 கோடி நிதி ஒதுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், பட்ஜெட் மீதான விவாதத்தின் போது, ”அடுத்த இரண்டு ஆண்டுகளில் தமிழ்நாடு அரசு 20 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்குவதற்கு என ரூ.2,000 கோடி நிதி ஒதுக்கியுள்ளது; அதாவது ஒரு மாணவருக்கு ரூ. 10,000 ஒதுக்கப்படுகிறது; 10,000 ரூபாயில் எப்படி ஒரு தரமான லேப்டாப் வாங்க முடியும்?" என்று அதிமுக எம்.எல்.ஏ. தங்கமணி கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்நிலையில், இன்று பட்ஜெட் மீது நடைபெற்ற விவாதத்தில் எம்எல்ஏ தங்கமணியின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு,
“ முதல் கட்டமாக இந்த ஆண்டில் ரூ.2.000 கோடியும், பின் அடுத்த ஆண்டில் மேலும் ரூ.2,000 கோடியும் வழங்கப்படும். எனவே சராசரியாக ஒரு மடிக்கணினியின் விலை ரூ.20,000 என்ற அளவில் தரமானதாக இருக்கும்.” என்று தெரிவித்துள்ளார்.