கொடைக்கானல் மலைப் பகுதிகளில் நேற்றிரவு பெய்த தொடர் கன மழையால் அடுக்கம் சாலையில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப் பகுதிகளில், கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. நேற்றிரவும் கொட்டித் தீர்த்த கனமழையால், மலைப்பகுதிகளின் ஓடைகளில் கட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. மிகவும் சரிவான மலைத் தொடரான அடுக்கம் பகுதிகளில் காட்டாற்று வெள்ளம் அதிகரித்து, அடுக்கம் நெடுஞ்சாலையில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. சில இடங்களில் சாலையும் துண்டிக்கப்பட்டதால், அடுக்கம் கிராம மக்கள் கொடைக்கானல் நகருக்கு மேல் ஏறி வரவும், பெரியகுளம் நகருக்கு கீழ் இறங்கி செல்லவும் முடியாமல் சிக்கி தவித்து வருகின்றனர்.
தகவலறிந்த நெடுஞ்சாலைத் துறையினர் அடுக்கம் சாலையில் ஏற்பட்டுள்ள மண் சரிவை சீரமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். 4 ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்ட சாலைகளில் நிலச்சரிவுகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் தடுப்பு சுவர்கள் அமைக்கப்பட உள்ளதாகவும், தொடர் முயற்சிகளின் மூலமே அடுக்கம் சாலை பேருந்து போக்குவரத்திற்கு ஏற்றதாக மாறும் எனவும் நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்துள்ளனர்.