நீலகிரியில் தொடர்ந்து பலத்த மழை பெய்துவருவதால் ஆபத்தான நிலையில் உள்ள வீடுகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூர், கோத்தகிரி குந்தா, போன்ற தாலுக்காக்களில் இரவு முழுவதும் பெய்த பலத்த மழை காரணமாக குன்னூர் மேட்டுபாளையம் சாலையில் 5வது கொண்டை ஊசி வளைவு மற்றும், காந்திபுரம் ஆகிய பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உதகையில் இருந்து குன்னூர் வழியாக மேட்டுப்பாளையத்திற்கு செல்லும் லாரி மற்றும் சுற்றுலாப் பேருந்துகள் கோத்தகிரி வழியாக திருப்பிவிடப்பட்டுள்ளன.
இதேபோன்று உதகையில், கோத்தகிரி சாலையில் கட்டபெட்டு, நடுஹட்டி போன்ற இடங்களிலும் மரங்கள் வேரோடு சாய்ந்தன. 30-க்கும் மேற்பட்டவர்கள் பல்வேறு இடங்களில் ஜேசிபி வாகனம் மூலம் மண்சரிவை அப்புறப்படுத்தி வருகின்றனர். தீயணைப்பு மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர் அவ்வப்போது சாலையில் விழும் மரங்களையும், மண் சரிவையும் அகற்றி வருகின்றனர். இரண்டு நாட்களாக இடைவிடாது பெய்து வரும் தொடர் மழை காரணமாக வணிக நிறுவனங்கள், உணவகங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. மேலும் இரண்டு நாட்களாக பல்வேறு இடங்களில் மின்சாரம் இல்லாத காரணத்தால், பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.