தமிழ்நாடு

மது அருந்திவிட்டு துன்புறுத்தும் கணவன் - 3 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை

கலிலுல்லா

வேலூரில் குடும்பத்தகராறு காரணமாக மூன்று குழந்தைகளை கொன்றுவிட்டு, பெண் ஒருவர் தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு கணவர் கைது செய்யபட்டுள்ளார்.

வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட சலவன்பேட்டை பகுதி கச்சேரி தெருவை சேர்ந்தவர் தினேஷ். டைல்ஸ் ஒட்டும் கூலித்தொழிலாளி. இவரது மனைவி ஜீவிதா (23) இவர்களுக்கு 2 ஆண் குழந்தை, 1 பெண் குழந்தை என 3 குழந்தைகள் இருந்தன. கணவன் தினேஷ் தினமும் மதுபோதையில் வந்து ஜீவிதாவையும் குழந்தைகளையும் அடித்து துன்புறுத்தியுள்ளார். இதனால் குடும்பத்தில் நாள்தோறும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால், மன உளைச்சலுக்கு ஆளான ஜீவிதா, 7 வயது பெண் குழந்தை அக்ஷயாவையும், 5 வயது ஆண் குழந்தை நந்தகுமாரையும், 6 மாத ஆண் கைக்குழந்தை என 3 குழந்தைகளையும் கயிறால் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, தாய் ஜீவிதாவும் வீட்டினுள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து தெற்கு காவல் நிலைய போலீசார் விசாரணையை முடுக்கி விட்டனர்.

அதை தொடர்ந்து, இச்சம்பவத்தில் கணவன் தினேஷ்குமாரை வேலூர் தெற்கு காவல் நிலையப் போலீஸார் கைது செய்துள்ளனர். கொலை மற்றும் சந்தேக மரணம் என இரண்டுப் பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து தினேஷ்குமாரிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)