தமிழ்நாடு

மேட்டுப்பாளையம்: ஊராட்சி துணைத் தலைவர் பதவிபெற லட்சக்கணக்கில் பணமா? - வீடியோவால் பரபரப்பு

JustinDurai

ஊராட்சி துணைத் தலைவர் பதவிபெற லட்சக்கணக்கான ரூபாய், வார்டு உறுப்பினர்களுக்கு கைமாறியது தொடர்பான வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் தாலுகா, சிக்கதாசம்பாளையம் ஊராட்சியில், கடந்த உள்ளாட்சித் தேர்தலின்போது அதிமுகவைச் சேர்ந்த கமலா வெற்றி பெற்று பஞ்சாயத்து தலைவரானார். அப்போது வார்டுகளில் வென்றவர்கள் மூலம் தேர்வு செய்யப்படும் துணைத் தலைவர் பதவிக்கு கடும் போட்டி நிலவிய நிலையில், வினோத்குமார் என்பவர் தேர்வானார்.

தற்போது மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள சூழலில், வினோத்குமாரை தேர்ந்தெடுத்த வார்டு உறுப்பினர்கள், அவர் தன்னிச்சையாக செயல்படுவதாகக் கூறி அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டமும் நடத்தினர். துணைத்தலைவர் பதவியை பயன்படுத்தி வினோத் குமார் முறைகேடுகளில் ஈடுபடுவதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டினர்.

இதுபோன்ற சூழலில், வினோத்குமாரை தேர்வு செய்த வார்டு உறுப்பினர்கள் பலருக்கு அவர் கட்டுக்கட்டாக பணம் கொடுப்பதாகக் கூறப்படும் வீடியோ காட்சி வெளியாகி உள்ளது. இதுகுறித்து கேட்க வினோத்குமாரை கைப்பேசியில் தொடர்புகொண்டபோது, அவர் அழைப்பை ஏற்கவில்லை.