யாத்திரை தொடங்கியதிலிருந்து திமுக மற்றும் அவர்களின் கூட்டணி கட்சிகளுக்கு தூக்கம் தொலைந்துவிட்டது என பாஜக மாநிலத்தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
பாஜகவின் வேல்யாத்திரை பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் மாநிலத் தலைவர் எல்.முருகன் “இந்த வெற்றிவேல் யாத்திரை அவசியமா என கேட்டார்கள். அவசியம் அல்ல. அத்தியாவசியம். இந்த யாத்திரை தொடங்கியதிலிருந்து திமுகவின் ஸ்டாலினுக்கும், அவரது கூட்டணி கட்சிகளுக்கும் தூக்கம் தொலைந்து போய் விட்டது.
இந்த யாத்திரையை தடை செய்ய வேண்டும் என்று சொல்கிறார்கள். அதற்கு காரணம் இந்த யாத்திரையால் கலவரம் வரும் என திமுக கூட்டணி கட்சிகள் கூறின. இந்த யாத்திரையால் ஒரு இடத்திலும் ஒரு பிரச்னையும் வரவில்லை. இந்த யாத்திரையை தடுக்க நினைப்பவர்களே கலவரம் செய்ய நினைக்கிறார்கள். அவர்களைதான் காவல்துறை விசாரிக்க வேண்டும் என சொன்னேன். யாத்திரை செல்லும் இடங்களில் மிகப்பெரிய எழுச்சி ஏற்பட்டு வருகிறது” எனத் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து பாஜகவின் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் பேசுகையில், “கோவையில் இருந்து பாஜக சார்பில் சட்டமன்ற உறுப்பினர்களை பேரவைக்கு அனுப்புவோம். அனைத்து சமய மக்களையும் சமமாக பார்க்க வேண்டும். அப்படிதான் பாஜக உள்ளது. வாக்குகளுக்காக ஒருசிலர் இந்துக்களை புண்படுத்துகின்றனர்” எனத் தெரிவித்தார்.