கோவையில் மக்கள் ஆசீர்வாத யாத்திரைக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணையமைச்சர் எல்.முருகன், மக்களை சந்திக்கவே யாத்திரை செல்வதாகக் கூறியிருக்கிறார்.
செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த எல்.முருகன், ’’மத்திய இணையமைச்சராக பொறுப்பேற்றபின் மக்களை சந்திக்க தமிழகத்தில் யாத்திரை செல்கிறேன். நாடு முழுவதும் மக்கள் ஆசீர்வாத யாத்திரை நடைபெறுகிறது. கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றியே நிகழ்ச்சிகளை நடத்துகிறோம்’’ என்று கூறினார்.
கொங்குநாடு குறித்து கேட்ட கேள்விக்கு, ‘’கொங்குநாடு என்பது மக்கள் முடிவு செய்யவேண்டியது’’ என்று கூறினார். நாடாளுமன்ற அமளி பற்றிக் கேட்டபோது, ‘’மத்திய அமைச்சர்களை அறிமுகம் செய்துவைக்கக்கூட நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் இடமளிக்கவில்லை’’ என்று எதிர்க்கட்சிகள் மீது குற்றம்சாட்டினார்.
தமிழகத்தில் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டம் குறித்து, ‘’அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராவது இது முதன்முறையல்ல; ஏற்கெனவே இருக்கின்றனர்’’ என்று பதிலளித்தார். தொடர்ந்து, ’’சர்வதேச நிலவரத்தை பொறுத்து பெட்ரோல், டீசல் விலை இருக்கும்’’ என்றும் கூறினார்.